பக்கம் எண் :

காடு பாடியது35


மான்கள் இயல்பு கூறியது

83.தீயின் வாயின்நீர் பெறினு முண்பதோர்
     சிந்தை கூரவாய் வெந்து வந்துசெந்
நாயின் வாயின்நீர் தன்னை நீரெனா
   நவ்வி நாவினால் நக்கி விக்குமே.

     (பொ-நி.) நவ்வி  -  சிந்தை கூர,  வெந்து,  வந்து நாயின் வாயின்
நீர் தன்னை  நக்கி  விக்கும்; (எ-று)

     (வி-ம்.)தீயின், வாய் - நெருப்பிடை. நீர்பெறினும்-நீர் கிடைப்பினும்.
ஆய் - ஆகி.   வாயின்  நீர் - வாயினின்று  சொட்டும்  நீர்.   நீர்எனா-
தண்ணீரெனக்   கருதி.   நவ்வி  - மான்.  செந்நாயின்  வாய்நீர்  நக்கத்
தக்கதன்றாகலின் அதனை நக்கிய மானுக்கு விக்கலுண்டாயிற்று. (9)

நிலத்தின் வெம்மை கூறியது

84.இந்நி லத்துளோர் ஏக லாவதற்கு.
     எளிய தானமோ அரிய வானுளோர்
அந்நி லத்தின்மேல் வெம்மை யைக்குறித்து
   அல்ல வோநிலத்து அடியி டாததே.

     (பொ-நி.) வானுளோர் அடி இடாதது வெம்மையைக் குறித்தல்லவோ; நிலத்துளோர் ஏகல் ஆவதற்கு எளிய தானமோ? (எ-று.)

     (வி-ம்.)ஏகல் ஆவது -ஏகுவது. தானம்-இடம்.  வானுளோர் -தேவர்.
நிலத்து  அடியிடாதது - பூமிமீது  தம்  கால்களை  வைக்காமல்  இருப்பது.
கடவுளர்களின்   கானிலந்தோயாமைக்குக்காரணம்   இப்பாலை   நிலத்தின
்கொடுமையே என ஆசிரியர் ஒரு புதுமையான காரணத்தைக் கூறுகிறார்.(10)

இதுவும் அது

85.இருபொழுதும் இரவிபசும் புரவிவிசும்பு
     இயங்காதது இயம்பக் கேண்மின்
ஒருபொழுதுந் தரித்தன்றி ஊடுபோ
   கரிது அணங்கின் காடென் றன்றோ.

     (பொ-நி.) புரவி இயங்காதது  கேண்மின்;  அணங்கின்  காடு  ஊடுபோ கரிதென்றன்றோ? (எ-று.)