பக்கம் எண் :

36கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.)இரவி-ஞாயிறு. புரவி-குதிரை. விசும்பு-வானம்.  இயங்காதது-
செல்லாததன் காரணம். தரித்தல்-தங்கி இளைப்பாறல். ஊடு-நடுவே. போக
அரிது -செல்லுதல் இயலாது. அணங்கு; காளி. (11)

இதுவும் அது

86. காடிதனைக் கடத்தும்எனக் கருமுகிலும்
     வெண்மதியுங் கடக்க அப்பால்  
ஓடிஇளைத்து உடல்வியர்த்த வியர்வன்றோ
   உகுபுனலும் பனியும் ஐயோ.

     (பொ-நி.) முகிலும் மதியும் கடக்க, வியர்த்த வியர்வன்றோ புனலும்
பனியும்; (எ-று.)

     (வி-ம்.) கடத்தும்   -  கடப்போம்.  முகில் - மேகம்.  மதி  நிலா.
உடல்வியர்த்த - தம்  உடலின்  வேர்த்தொழுகிய.  புனல்-மழைநீர். பனி-
பனிநீர். ஐயோ: இரக்கம் பற்றிவந்த இடைச்சொல்.                 (12)

இதுவும் அது

87. விம்முகடு விசைவனத்தின் வெம்மையினைக்
     குறித்தன்றோ விண்ணோர் விண்ணின்
மைம்முகடு முகிற்றிரையிட்டு அமுதவட்ட
   வாலவட்டம் எடுப்ப தையோ.

     (பொ-நி.) விண்ணோர்,  முகில்  திரையிட்டு, ஆலவட்டம் எடுப்பது, வனத்தின் வெம்மையினைக் குறித்தன்றோ? (எ-று.)

     (வி-ம்.) விம்மு-மிகுதியான. விசை -வெம்மையின் வேகம். வெம்மை -
வெப்பம். முகடு-உச்சி. முகில் திரை-மேகமாகிய திரை. அமுதவட்டம்-நிலா.
ஆல வட்டம்-விசிறி. அமுதவட்டமாகிய ஆலவட்டம் என்க.        (13)

மரங்களின் தோற்றம் கூறியது

88.நிலம்புடைபேர்ந் தோடாமே
     நெடுமோடி நிறுத்தியபேய்
புலம்பொடுநின் றுயிர்ப்பனபோல்
   புகைந்துமரங் கரிந்துளவால்.