பக்கம் எண் :

38கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.) சூறை, சுடலைப் பொடியைச் சீத்தடிப்ப,  அப் பொடியால்
புதைந்த மணி தழலேபோலும்; போலாவேல் தணலேபோலும்; (எ-று.)

     (வி-ம்.) சிதைந்த - உயிர்போய்ச்   சிதைந்த.  சூறை  - சூறாவளி
சுழல்காற்று. சீத்து -கிளறி. புதைந்த-மறைந்த. மணி -இரத்தினம். பொடிமூடு
தணல் - நீறு  பூத்த  நெருப்பு.  செல்வராயினார்  பிணங்களின்  மீதுள்ள
மணியணிகளைக்      கழற்றா      தொழிந்தமையின்      அம்மணிகள்
பலவிடங்களினுங்கிடந்து விளங்கலாயின.                         (17)

மூங்கில் முத்துதிர்தல் கூறியது

92. மண்ணோடி அறவறந்து துறந்து அங்காந்த
     வாய்வழியே வேய்பொழியும் முத்தம் அவ்வேய்
கண்ணோடிச் சொரிகின்ற கண்ணீ ரன்றேல்
   கண்டிரங்கிச் சொரிகின்ற கண்ணீர் போலும்

     (பொ-நி.) வேய்  பொழியும்  முத்தம் கண்டு  இரங்கிச் சொரிகின்ற
கண்ணீர் போலும்; (எ-று.)

     (வி-ம்.) ஓடி- வெடிப்பு ஓடி. வறந்து-வறண்டு. துறந்து பிடிப்பு நீங்கி.
அங்காத்தல் - வாய்பிளத்தல். வேய்-மூங்கில். முத்தம்-முத்து. கண்ணோடி-
கண்ணோட்டம்  செய்து;  கணுக்கள்  வெடித்து. கண்டிரங்கி-கண்டு மனம்
இரங்கி;  கண்திரங்கி.  கணுக்கள்  சுருங்கி  எனவும்  கூறலாம். முதிர்ந்த
மூங்கில்களில் முத்துக்கள் உண்டாகி வெடித்து வெளிப்படுதலை இவ்வாறு
பாலைநில வெம்மைக் கிரங்கிக் கண்ணீர் சொரிவதாகக் கற்பித்தார்.  (18)

இதுவும் அது

93. வெடித்தகழை விசைதெறிப்பத் தரைமேல் முத்தம்
     வீழ்ந்தனஅத் தரைபுழுங்கி அழன்று மேன்மேற் 
பொடித்தவியர்ப் புள்ளிகளே போலும் போலும்
   போலாவேல் கொப்புளங்கள் போலும் போலும்.

    (பொ-நி.)   கழைதெறிப்ப      வீழ்ந்தன     ஆகிய     முத்தம்
வியர்ப்புள்ளிகளே போலும், போலாவேல் கொப்புளங்கள் போலும்;
(எ-று.)

     (வி-ம்.)  கழை-மூங்கில். விசை-விரைவு, தெறிப்ப-வெடிக்க. புழுங்கி
- வருந்தி. புள்ளி-வியர்வைத் துளிகள், முன்பாட்டிற் கண்ணீர்த்துளிகளெனக்
கற்பித்தவர் இப்பாட்டில் வியர்வைத் துளிகளாகவுங்  கொப்புளங்களாகவுங்
கூறினார்.                                                   (19)