பக்கம் எண் :

40கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.) அணிகொண்ட - (இராவணனோடு)  போர்செய்தற்கு  எழுந்த,
அலைகடல் - அலைகளையுடைய கடல்,  பாலைமணல் - பாலை  நிலத்தின்
மணல். வரை - மலை. மயங்கின - அறிவின்மையால்  வருத்தமுற்றன.  (22)

4. கோயில் பாடியது

     [பேய்களுக்குக் கலிங்கக் கூழ் அளித்த தலைவியாகிய காளி  உறையும்
காட்டைக்  கூறியபின், அவளது  கோயிலின்  இயல்பு  கூறப்படுகிறது.]

     கோயிலுக்கு  அடிப்படை  அமைத்தலும்,  சுவர்  அடுக்கியதும் தூண்
நிறுத்தி   உத்திரம்   சமைத்ததும்,   கூரையில்  துலாம்  அமைத்துப்  பாப்
பரப்பியதும், நாசிகை இயற்றியதும், கூரை வேய்ந்ததும்,  கோபுரமும்  மதிலும்
இயற்றியதும்,   மகர    தோரணம்  விளைத்ததும்,  கொடி முதலாகப்  பல
பொருள்களையும் சுற்றிலும் கட்டி  அணி  செய்ததும்.  ஊசல்  அமைத்ததும்,
அலகிட்டு நீர் தெளித்துப், பூச்சிந்தி, விளக்கேற்றியதும் வரிசைபடவும்  அழகு
பொருந்தவும்  கூறப்பட்டுள்ள  தன்மை  வியத்தற்குரியதாகும்.

     இதன் பின், உறுப்பரிந்து தருவோம் என வழிபடும்  வீரர்  முழக்கும்,
காளிமுன்  வேள்வி  வளர்க்கும்  இயல்பும்,  தஞ்சிரத்தையரிந்து  காளிக்குக்
கொடுக்கும் வீரர் செயலும், பலிபீடத்தில்  தலையரிந்து  வைக்கும்  இயல்பும்,
தலையரிந்த உடம்பு துடிக்கும் இயல்பும், உடுக்கையடித்துக் கடாப்பலி  இடும்
முழக்கும்  கூறப்படுகின்றன.

     பிறகு   சாதகர்   யோகினியர்  காளியை   வணங்கவரும்   இயல்பு
கூறப்படுகி்றது.

     அடுத்து, மூங்கில்தொறும் அரிந்த தலைகள் தொங்கவிடப்பட்டிருக்கும்
காட்சி சொல்லப்படுகிறது.

     கடைசியாகக்,  கொள்ளிவாய்ப்பேய்,  பருந்து,  நரி,  சுடுகாடு, பிணம்,
நெருப்பு, செம்பருத்தி, பேய் முதலியன கோயிலைச்  சூழ்ந்திருக்கும்  இயல்பு
கூறப்பட்டுள்ளது.

தோற்றுவாய்

97.ஓதி வந்தஅக் கொடிய கானகத்து
     உறைய ணங்கினுக்கு அயன்வ குத்தவிப்
பூத லம்பழங் கோயில் என்னி்னும்
   புதிய கோயிலுண்டுஅது விளம்புவாம்