பக்கம் எண் :

42கலிங்கத்துப்பரணி

தூண் உத்திர இயல்பு கூறியது

100.அறிஞர் தம்பிரான் அபயன் வாரணம்
     அரசர் மண்டலத் தரண றப்பறித்து
எறித ரும்பெருங் கணைம ரங்கள்கொண்டு
   எழுது தூணொடு உத்திர மியற்றியே.

     (பொ-நி.)  வாரணம்  பறித்து  எறிதரும்  கணைமரங்கள்  கொண்டு
தூணொடு  உத்திரம்  இயற்றி; (எ-று.)

     (வி-ம்.) பிரான் - தலைவன். வாரணம் - யானை. அரண்- காவற்காடு.
கணைமரம்-கோட்டை  வாயிற்கதவின்  குறுக்கே  இடும்  மரம்.  எழுதுதூண்
-பதித்த தூண்.                                                (4)

துலாம் பா இயல்பு கூறியது

101.கடித ழிந்துபோர் மிதிலை யிற்படும்
     கரிம ருப்பினைத் திரள்து லாமெனும்
படிப ரப்பிஅப் பரும யானையின்
   பழுஎ லும்பினில் பாஅ டுக்கியே

     (பொ-நி.) கரி மருப்பினைத் துலாம் எனும்படி பரப்பியானையின் பழு
எலும்பினில் பா அடுக்கி; (எ-று)

     (வி-ம்.) மிதிலை - மிதிலைநகரம். கரி-யானை. மருப்பு-தந்தம். துலாம்
-உத்திரத்தின்மேல் முக்கோண வடிவுடன்  நிறுத்திய  மரம்.  பா - கூரையில்
இருபக்கமும் பரப்பும் கைகள்.                                    (5)

நாசிகை இயல்பு கூறியது

102.மீளி மாவுகைத்து அபயன் முன்னொர்நாள்
     விருத ராசரைப் பொருது கொண்டபோர்
ஆளி வாரணங் கேழல் சீயமென்று
   அவைநி ரைத்துநா சிகையி ருத்தியே.

     (பொ-நி.) அபயன், உகைத்து, பொருது, கொண்ட  அவை  நிரைத்து
நாசிகை இருத்தி; (எ-று.)

     (வி-ம்.) மீளி  வலிமை:  மா-யானை. விருது-வெற்றிச் சின்னம். ஆளி
-யாளி. வாரணம்-யானை. கேழல்- பன்றி.  சீயம் - சிங்கம்.  இவை  எழுதிய
கொடிகள் என்க. நிரைத்து-வரிசையாக வைத்து. நாசிகை-கூடல்வாய்.     (6)