பக்கம் எண் :

கோயில் பாடியது45


வழிபாட்டியல்பு கூறியது

109.சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர்
      தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப்
பலியாக உறுப்பரிந்து தருதும் என்று
     பரவுமொலி கடலொலிபோல் பரக்கு மாலோ.

    (பொ.நி.) வீரர் "வரம் தருக; தக்கதாக உறுப்பரிந்து தருதும்" என்று
பரவும் ஒலி பரக்கும்; (எ-று.)

    (வி-ம்.) சலியாத-மனந்தளராத. தறுகண்-அஞ்சாமை. தருக-தருவாயாக.
பலி-கொடுக்கின்ற  கடன்.  உறுப்பு-அவயவம்.  பரவுதல்-துதித்தல்.  பரக்கும்
-பரவும்.                                                     (13)

இதுவும் அது

110. சொல்லரிய ஓமத்தீ வளர்ப்ப ராலோ
      தொழுதிருந்து பழுவெலும்பு தொடரவாங்கி
வல்லெரியின் மிசைஎரிய விடுவ ராலோ
     வழிகுருதி நெய்யாக வார்ப்ப ராலோ.

    (பொ-நி.)ஓமத்தீ வளர்ப்பர்;  எலும்பு வாங்கி எரியவிடுவர்; குருதி
நெய்யாக வார்ப்பர்; (எ-று.)

    (வி-ம்.)   பழுஎலும்பு - விலாஎலும்பு.  தொடர -  ஒன்றோடொன்று
தொடர்புற்று நிற்க. வாங்கி-பிடுங்கி. வல் எரி-மிகு  நெருப்பு.  குருதி-செந்நீர்.
வார்ப்பர்-ஊற்றுவர்.                                           (14)

இதுவும் அது

 111.அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ
      அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ
     குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ.

    (பொ-நி.) சிரத்தை  அரிவர்;  அரிந்த  சிரம்  கொடுப்பர்; கொடுத்த
சிரம் பரவும்; குறை உடலம் கும்பிட்டு நிற்கும்; (எ-று.)

    (வி-ம்.)  அடிக்கழுத்து - கழுத்தின் முதலிடம்.  அரிவர் - அறுப்பர்.
அணங்கு-காளி.  கொற்றவை - காளி.  பரவும் - துதிக்கும்.  குறை உடலம்
-தலையற்ற  உடம்பு.                                          (15)