பக்கம் எண் :

பாயிரம்5


    (பொ-நி.)  சயத்தம்பம்   பல   நாட்டி,  கவித்து  நிற்கும்  கவிகைக் கலிப்பகைஞன் வாழ்க என்று, கட்டுண்டு, நாற்கூடத்து  அணைந்து நிற்கும்
ஒரு களிற்றுக்கு அன்பு செய்வாம்; (எ-று.)

    (வி-ம்.)காரண  காரியக்கட்டாவது  அகப்பற்றும் புறப்பற்றும்; அவை
உடல்  மனைவி  மக்கள்மேல்  உண்டாவன.   கட்டறுப்போர் - யோகியர்.
யோகம்-மன ஒருமைப்பாடு. தறி-கட்டுத்தறி. ஆரணம்- மறை. கூடம்-யானை
கட்டுமிடம். தறி-தூண். சயத்தம்பம் - வெற்றித்தூண்.  வெற்றி பெற்றமைக்கு
அடையாளமாகக்  கல்தூண்  நிறுவிவைப்பது.  கூடம் -  அண்டகோளகை
கவிதை  -  குடை,    குடைக்கு  அண்டகோளகை  உவமையாம்  என்க.
கலிப்பகைஞன் -  துன்பத்தை ஒழிப்போனாகிய  குலோத்துங்கன். அபயன்
புகழ் மேம்பாடு குறிக்கப்பட்டது.                              (9, 10)

ஆறுமுகன் வணக்கம்

11.பொன்னிரண்டு வரைதோற்கும் பொருவரிய
     நிறம்படைத்த புயமும் கண்ணும் 
பன்னிரண்டும் ஆறிரண்டும் படைத்துடையான்
   அடித்தலங்கள் பணிதல் செய்வாம்.

 
12.ஓரிரண்டு திருக்குலமும் நிலைபெறவந்து
    ஒருகுடைக்கீழ்க் கடலுந் திக்கும்  
ஈரிரண்டு படைத்துடைய இரவிகுலோத்
   தமனபயன் வாழ்க வென்றே.
    
    (பொ-நி) நிலைபெறவந்து,  கடலும்  திக்கும் படைத்துடைய அபயன்
வாழ்க என்று,  புயமும் கண்ணும் பன்னிரண்டும் ஆறிரண்டும் உடையான்
அடித்தலங்கள்  பணிதல்  செய்வாம்; (எ-று.)

    (வி-ம்.) இரண்டு     பொன்வரை     தோற்கும்என     இயைக்க. இணைப்புயங்களுக்கு  இருவரை உவமை என்க.பொரு-ஒப்பு, புயம்-தோள்.
இரண்டு குலம்-தாய்தந்தையர் குலம். ஈரிரண்டுகடலும் திக்கும் என இயக்க.
இரவி-ஞாயிறு.  குலோத்தமன்;  குல+உத்தமன்.  தன்  மரபிற்  சிறந்தவன், மேலானவன். ஈண்டும் ஆட்சிப் பரப்பே குறிக்கப்பட்டது.(11, 12)

நாமகள் வணக்கம்

13.பூமாதுஞ் சயமாதும் பொலிந்து வாழும்
     புயத்திருப்ப மிகவுயரத் திருப்பள் என்று
நாமாதும் கலைமாதும் என்னச் சென்னி
   நாவகத்துள் இருப்பாளை நவிலு வாமே.