பக்கம் எண் :

62கலிங்கத்துப்பரணி

7. இந்திர சாலம்

     [முற்கூறியபடி  பேய்கள்  பலவும்  சூழ்ந்திருக்கக்,   காளி  அணை
பரப்பிய கட்டிலின் மீதமர்ந்திருக்க,  இடாகினிகள் காளியின் இரு புறத்தும்
இருந்து  கவரி  வீச,  நெடும்பேய்  ஒன்று காளிக்கு வணக்கம் செலுத்திக்,
காளியின்  சினத்தீயிற்பட்டு  மறைவாக  இமயம்   சென்று  வாழ்ந்திருந்த
முதுபேய்  ஒன்று  மீண்டு வந்து காளியைக்காண நிற்பதைக் கூற, காளியும்
அழைக்க.  முதுபேய்  வந்து நின்று தான் இமயத்தில் உறைந்தபோது கற்ற
இந்திரசாலங்களைக்  காளி  முன்  காட்டுகின்றது.  அம்முதுபேய் காட்டும்
இந்திர சாலங்கள் பலவும் மிகவும் வியப்புற ஈண்டுக் கூறப்படுகின்றன.]

காளியின் கட்டில்

153.இவ்வண்ணத்த இருதிறமுந் தொழுதிருப்ப
     எலும்பின்மிசைக் குடர்மென் கச்சிற்
செவ்வண்ணக் குருதிதோய் சிறுபூதத்
   தீபக்கால் கட்டி லிட்டே.

     (பொ-நி.) இவ்வண்ணத்த தொழுதிருப்ப, எலும்பின் மிசை, தீபக்கால்
கட்டில் இட்டு; (எ-று.)

     (வி-ம்.)இவ்வண்ணத்த  - மேலே  குறிப்பிட்ட  இத்திறத்தனவாகிய
பேய்கள்.  எலும்பின் மிசை - எலும்புக்  குவியலின்  மீது.  திறம் -பக்கம்;
குடராகிய  கச்சிப்பட்டையால்  கட்டிய  கட்டில் என்க. தீபக்கால் - கட்டில்
கால்களில் ஒருவகை. சிறுபூதக் கட்டிலாகிய தீபக்கால் கட்டில் என்க.    (1)

கட்டில் மேல் அணை

154. பிணமெத்தை யஞ்சடுக்கிப் பேயணையை
     முறித்திட்டும் தூய வெள்ளை 
நிணமெத்தை விரித்துயர்ந்த நிலாத்திகழும்
   பஞ்சசய னத்தின் மேலே.

     (பொ-நி.)   பிணமெத்தை  அடுக்கி,  பேய் அணையை இட்டு, நிண
மெத்தை வரித்துத் திகழும் பஞ்ச சயனத்தின்மேல்; (எ-று.)