பக்கம் எண் :

72கலிங்கத்துப்பரணி

8. இராச பாரம்பரியம்

      [இந்திரசாலம்  காட்டிய முதுபேய்,  தான்  இமயத்தில் வாழ்ந்திருந்த
காலையில், கரிகாலன் வந்து இமயத்தில் புலி பொறித்தானாகவும், அக்காலை
ஆண்டு வந்த  நாரதன் சோழர் மரபின் தொடக்க முதலான வழிமுறையைக்
கூறினானாகவும்,  அதைக் கரிகாலன்  இமயத்தில்  பொறித்தானாகவும் கூறி,
அவன் அங்ஙனம் பொறித்த சோழர் வழிமுறையைக் கூறத் தொடங்கியது.

      திருமாலுக்கு  நான்முகனும்,  அவனுக்குப்பின்  முறையே  மரீசியும்,
காசிபனும் ஞாயிறும் தோன்றியதையும்,

      பின்  அரும்பெறற்  புதல்வனை  ஆழியின்  மடித்த  மனுவேந்தன்
தோன்றியதையும்,

      பின்,   இக்குவாகுவும்,   ககுத்தனும்  மாந்தாதாவும்,  முசுகுந்தனும்,
பிருதுலாட்சனும், சிபியும் தோன்றியதையும்.

      பின்,  சோழர் குடிப்பெயரையும் சோழமண்டலத்தையும் ஏற்படுத்திய
சுராதிராசனும்,  புலிக்கொடியை  ஏற்படுத்திய  இராசகேசரி  பரகேசரியரும்.
காலனுக்கு      வழக்குரைத்த      கிள்ளிவளவனும்,      காவிரிப்புனல்
கொணர்ந்தவனும், நாட்டு மக்கள் நெடிது வாழ நோய்தவிர்த் தாண்டவனும்,
இந்திரனைப் புலிக்கொடியாக வைத்த சித்திரனும், கடல் கலக்க விட்டவனும்,
குருதியை உண்ணுநீராகக்கொடுத்த பஞ்சவனும்,வாயுவைப்பணிகொண்டவனும்,
தூங்கெயில்   எறிந்த   தொடித்தோட்  செம்பியனும்  வானத்தே  விமான
மூர்ந்தவனும்,  பாண்டவர்க்குதவி  செய்தவனும்,  நாககன்னியை   மணந்த
கிள்ளிவளவனும்,   களவழி   நாற்பது  கொண்ட கோச்செங்கட் சோழனும்
தோன்றியதையும்,

      பின், காவிரிக்குக் கரை கட்டியும், பட்டினப்பாலை கொண்டும் சிறந்த
கரிகாலன் தோன்றியதையும்,

      பின்,    (தஞ்சைச் சோழர்களான)    பராந்தகன்.     இராசராசன்,
இராசேந்திரன்,   இராசாதிராசன்,  இராசேந்திரதேவன்,  இராச மகேந்திரன்,
வீரராசேந்திரன் தோன்றியதையும்,

      பின்,      (இப்பரணி நூல் தலைவனான)         குலோத்துங்கன்
தோன்றியதையும் கரிகாலன் எழுதினானாக ஈண்டுக் குறிக்கப்படுகின்றது.]

கரிகாலன் இமயத்தில் புலிக்குறி பொறித்தது கூறியது      

178.செண்டு கொண்டுகரி காலனொரு காலின் இமயச்
    சிமய மால்வரைதி ரித்தருளிமீள அதனைப்
பண்டு நின்றபடி நிற்கஇது வென்று முதுகில்
   பாய்பு லிக்குறிபொறித்து அதும றித்தபொழுதே.