பக்கம் எண் :

85


என,  ஒக்கூர்  மாசத்தியாரும்  கூறும் கருத்துரைகள், தாய்மையன்பின்
நிலைக்கு இதனோடு ஒத்த கருத்தாதலை அறிந்தின்புறுக.              (33)

காளி குலோத்துங்கனைப் புகழ்தல்      

211. உலகையெலாங் கவிக்கின்ற ஒருகவிகைச்
    சயதுங்கன் மரபு கீர்த்தி
அலகையெலாங் காக்கின்ற அம்மைபூ
  தலங்காப்பான் அவனே யென்ன.

     (பொ-நி.)  அம்மை,  ழுசயதுங்கன் மரபு  கீர்த்தி (வாய்ந்தது.) பூதலம்
காப்பான் அவனே" என்ன; (எ-று.)

     (வி-ம்.) கவித்தல்-மேல் நின்று நிழற்றல்.  கவிகை-குடை. சயதுங்கன்-
குலோத்துங்கன், மரபு  கீர்த்தி-பரம்பரையோர் புகழ். அலகை-பேய். அம்மை-
காளி. பூதலம்-உலகம். இவன்: குலோத்துங்கன்.                      (34)

_____________

9. பேய் முறைப்பாடு

     [முதுபேய் கூறியன கேட்டுக் காளி மகிழ்ந்திருந்த
இவ்வமயத்தே,    காளியைச்     சூழ்ந்திருந்த     பேய்களெல்லாம்    தம்
பசிக்கொடுமையைக்   காளிக்குக்   கூறி,  முடிவாகத்   தமக்கேற்படும்   சில
நற்குறிகளையும்  கூறின.  அப்பொழுது,  முதுபேய்,   தான்  இமயத்தினின்று
வருங்காலைக் கலிங்கத்துச் சில தீய நிமித்தங்களைக் கண்டதாகக் கூறியது.

     அதுகேட்ட   காளி  "உங்களுக்கேற்பட்ட  குறியும் கலிங்கத்தேற்பட்ட
குறியும் உங்கட்கு நன்மைவிளைவதையே தெரிவிப்பனவாகும்.நம் கணிதப்பேய்
நனவிலும் கனவிலும் கண்டு கூறியபடி குலோத்துங்கன் யானைகள் போருக்குத்
தயாராயிருக்கின்றன. ஒரு பரணிப்போர் உண்டு," என்று கூறினாள்.

     அதுகேட்ட பேய்கள் மகிழ்ச்சியால் குதித்துக் கூத்தாடிக், "கலிங்கக்கூழ்
எம்  வயிறு  நிறையப்  போதுமோ?"  எனக்  கேட்கக்  காளி,  "இலங்கைப்
போர்க்குக்     கலிங்கப்போர்  ஒட்டிரட்டி,"   என்று   கூறிப்   பேய்களை
அமைதியுற்றிருக்குமாறு கூறினள். இவ்வளவில் இப் பகுதி முடிகிறது.]