இளவரசுப் பட்டம் எய்திய குலோத்துங்கன் போர்மேற் செல்ல விரும்பி எழுந்து, வடதிசை நோக்கிச் சென்று, சென்ற விடமெல்லாம் பகைவரை அழித்தனன்; வயிராகரத்தை எரித்தனன்; சக்கரக் கோட்டத்தை அழித்தனன்; இங்ஙனம் சென்ற விடமெல்லாம் வடவரை வணக்கி அவர்களுடைய யானையும், குதிரையும், செல்வமும் கைப்பற்றினன். இங்ஙனம் குலோத்துங்கன் வடநாட்டில் போர் மேற்கொண்டிருக்கையில், சோழநாட்டில் வீரராசேந்திரன் விண்ணாடடைந்தனன். அரசன் இறந்தானாக, நாடு நிலைகுலைந்து தடுமாறி அல்லோல கல்லோலப்பட்டு அலைந்தது. இதைச் செவியுற்ற குலோத்துங்கன் சட்டெனச் சோழநாடடைந்து நாட்டை நெறியுறச்செய்து பண்டுபோல் நிலைநிறுத்தினன். பின் குலோத்துங்கன் மங்கல நீராடி, முடிசூடி, புலிக்கொடி கொண்டு, வெண்கொற்றக்குடை நிழற்ற விளங்கினன்; பொருண் மழை பொழிந்தனன். பரிசு பல கொடுத்தான்; செங்கோல் சிறந்தது; மற்போரும், புலவர் சொற்போரும், கோழிப்போரும், யானைப்போரும் கண்டு களித்தனன்; கலை, கலைவாணர் இசை, காதன் மாதர், மனுநீதி, மறை என்பவற்றோடு பொழுதுபோக்கினன். இங்ஙனமிருந்து காவிரிக்கரையில் வேட்டையாடிப் பொழுதுபோக்கிய குலோத்துங்கன் ஒருநாள், 'பாலாற்றங்கரைக்கு வேட்டையாடச் செல்வோம்' என்றனன். உடனே முரசறையப்பட்டது; நால்வகைப் படைகளும் திரண்டன; ஒரு நற்பொழுதில் சேனையுடன் புறப்பட்டான் குலோத்துங்கன். மறையவரும், மன்னரும், கவிவாணரும் சூழ்ந்தனர். குலோத்துங்கன் வெண்கொற்றக்குடை நிழற்ற இருபுறமும் கவரிவீச, யானை மீதிவர்ந்தனன். வலம்புரியும், சங்கும், பிற இயங்களும் ஒலித்தன. அரசர் ழுசெய' எனும் ஒலியும், மறையவர் மறையொலியும் எங்கும் நிறைந்தன. அரசன் தேவியான ஏழிசைவல்லபி யானைமீது உடனிருந்தனள். மற்றைய தேவியான தியாகவல்லி பிடிமீ தமர்ந்து உடன் வந்தனள். மகளிரும் அரசரும் பிடிமீதும் யானைமீதும் சூழ்ந்து வந்தனர். படைவீரர் கையில் படையுடன் நெருங்கி வந்தனர். யானைமீது முரசங்கள் ஒலித்தன. கொடிகள் எங்கும் காட்சியளித்தன. மகளிர் பலர்தேரேறி வந்தனர்; பலர் சிவிகை ஏறிவந்தனர். வெண்கொற்றக்குடைகள் நெருங்கித் தோன்றின. பல நாட்டரசர் கொடிகளும் |