பக்கம் எண் :

101

மில்லாதவக்ள் எனவும், மிக்க தனவான் என்றும் - பெரிய செல்வன் எனவும்,
ஏழை யென்றும் - வறியனெனவும், இந்தவகையைக் குறித்து ஒரு பட்சபாதம்
ஓர் எள்ளளவு உரைத்திடாமல் - இத்தகைய நிலையைக்குறித்து விருப்பு
வெறுப்புக்கள் எள்ளளவேனுங் கூறாமல், எண்ணமுடனே இலிகித புத்தியொடு
- (நடுநிலை) நினைவுடன் எழுத்து மூலமான சான்றுகளோடு, சாட்சிக்கும்
ஏற்க - சாட்சி கூறியதற்குந் தக, சபா சமதம் ஆம் - அவையோர் ஒப்பும்
முறையில், முந்த இருதலையும் சமன்செய்த கோல்போல் - முதன்மைபெற
இருசார்பிலும் சமப்படுத்திய துலாக்கோல்போல, மொழிந்திடில் தர்மம் அது -
முறை கூறுவது அறமாகும், முன் முனைவீமன் உடல்பாதி மிருகந்தனக்கு
என்று தருமர் சொன்னது அலவோ? - முற்காலத்தில் வலிய வீமனுடைய
பாதிமெய் புருடா மிருகத்துக்குத்தான் எனத் தருமபுத்திரர் கூறியது
அறமன்றோ?

                 தருமர் நீதிவழங்கிய கதை

     தருமபுத்திரன் செய்த வேள்வி யொன்றுக்குப் ‘புருடாமிருக'த்தை
அழைத்துவர வீமன் சென்றான். அது ஓர் ஒப்பந்தம் பேசியது: வீமன்
விரைந்து முன்னே செல்ல வேண்டும். புருடா மிருகம் பின்னே வரும். அது
வீமனைப் பற்றுவதற்கு முன்னாலே அவன் தன் நாட்டின் எல்லையைத்
தொட்டுவிட வேண்டும். இதற்கிடையிலே அது வீமனைப் பிடித்துவிட்டால்
அவன் அதற்கு உணவாகவேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு வீமன்
இசைந்தான், ஆனால், அவன் தன் நாட்டின் எல்லையிலே ஒரு காலை
வைத்தவுடன் அது அவனைப் பற்றிக்கொண்டது. வீமன் தன்காலைத் தன்
எல்லையில் வைத்து விட்டதால் தன்னை அது உணவாக்கிக்கொள்ளலாகாது
என்றான். ஆனால், அவ் விலங்கு மற்றொரு காலை அவன் எல்லையிலே
வைக்கவில்லை என்று வற்புறுத்தியது. இருவரும் தருமபுத்திரரிடம் சென்று
வழக்குரைத்தனர். அவர் நடுநிலை தவறாமல் வீமனுடைய பாதிமெய்
விலங்கிற்கு உரியதுதானென்று தீர்ப்புக் கூறினார். இவ்வாறு பாரதக்கதை
கூறும்.

     (கருத்து) முறை வழங்குவதில் விருப்புவெறுப்புக் காட்டாமல்
நடுநிலையாக இருத்தல்வேண்டும்.                         (61)