பக்கம் எண் :

103

விடுவார்கள்; சமானமாம் எழுபிறப்பும் சந்ததியிலாது உழல்வர் -
அவர்களெடுக்கும் ஏழுபிறப்பிலும் ஒன்றுபோல் கால்வழியில்லாமல்
வருந்துவர்; அவர் முகத்தினில் மூத்ததையலே குடியிருப்பாள் -
அவர்களுடைய முகத்திலே மூதேவியே வாழ்வாள்; புவிமங்கையும் இவர்
பாரம் என்று நடுங்குவாள் - நிலமகளும் இவர்களைத் தாங்கமுடியாமல்
அஞ்சுவாள்; பழித்த துர்மரணம்ஆவார் - பிறர் பழிக்கும்படி கெடுதியான
சாவு பெறுவர்; பகர்முடிவிலே ரவுரவாதி நரகத்து எப்போதும் அனுபவிப்பர்
என்பர் - இவ்வாறு இழித்துக் கூறும் முடிவுக்குப்பின் எக்காலத்தும்
இரவுரவம் முதலான நரகங்களிலே கிடப்பர் என்று பெரியோர் கூறுவர்.

     (கருத்து) ஓரமாக வழக்குரைத்தலைவிடக் கொடிய
தீமைவேறொன்றும் இல்லை.                             (62)

          63. ஒன்று வேண்டும்

கொங்கையில் லாதவட் கெத்தனைப் பணியுடைமை
     கூடினும் பெண்மையில்லை
கூறுநிறை கல்வியில் லாமலெத் தனைகவிதை
     கூறினும் புலமையில்லை

சங்கையில் லாதவர்க் கெத்தனை விவேகம்
     தரிக்கினும் கனதையில்லை
சட்சுவை பதார்த்தவகை உற்றாலும் நெய்யிலாச்
     சாதமும் திருத்தியில்லை

பங்கயம் இலாமல்எத் தனைமலர்கள் வாவியில்
     பாரித்தும் மேன்மையில்லை
பத்தியில் லாமல்வெகு நியமமாய் அர்ச்சனைகள்
     பண்ணினும் பூசையில்லை

மங்கையர் இலாமனைக் கெத்தனை அருஞ்செல்வம்
     வரினும்இல் வாழ்க்கையில்லை
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.