பக்கம் எண் :

124

     (அருஞ்சொற்கள்) சத்தியம் (வட) - உண்மை. வித்வசனம் (வட)
- புலவர் பெருமக்கள். உறுதி - நன்மை (உறுவது என்று பொருள்) -
சர்ச்சனர் (வட) - நல்லோர்.

     (கருத்து) வேல் முதலியவைகளாற் கை முதலியவை
நன்மையடையும்.                                     (76)

           77. வறுமை

வறுமைதான் வந்திடின் தாய்பழுது சொல்லுவாள்
     மனையாட்டி சற்றும் எண்ணாள்
வாக்கிற் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத
     வசனமாய் வந்துவிளையும்

சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது
     சிந்தையில் தைரியமில்லை
செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்ஆம்
     செல்வரைக் காணில்நாணும்

உறுதிபெறு வீரமும் குன்றிடும் விருந்துவரின்
     உயிருடன் செத்தபிணமாம்
உலகம் பழித்திடும் பெருமையோர் முன்புசென்
     றொருவரொரு செய்திசொன்னால்

மறுவசன முஞ்சொலார் துன்பினில் துன்பம்இது
     வந்தணுகி டாதருளுவாய்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மயிலேறி..........குமரேசனே!-, வறுமை தான் வந்திடில் -
(ஒருவனுக்கு) வறுமை வந்தால், தாய் பழுது சொல்வாள் - அன்னையும்
குற்றங் கூறுவாள்; மனையாட்டி சற்றும் எண்ணாள் - இல்லாளும் சிறிதும்
மதியாள்; வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து
விளையும் - வாயிலிருந்து வரும் மொழிகள் எல்லாம் தீயமொழிகளாக
மாறிவிடும்; சிறுமையோடு தொலையா