மானையும்
திகழ்தெய்வ யானையும் தழுவுமணி
மார்பனே அருளாளனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மானையும்
திகழ் தெய்வயானையும் தழுவும் மணிமார்பனே!
- மான்மகளையும் தெய்வயானையையும் தழுவுகின்ற அழகிய மார்பனே!,
அருளாளனே! - அருளுடையவனே!, மயிலேறி......குமரேசனே!-, ஆனை
தண்ணீரில் நிழல்பார்த்திடத் தவளை சென்று அங்கே கலக்கி உலவும் -
யானை தண்ணீரில் தன் நிழலைப் பார்க்கும் போது தவளை அங்கே
போய்க் கலக்கி (நிழலைப் பார்க்கமுடியாமல்) திரியும். ஆயிரம்பேர்கூடி
வீடு கட்டிடில் ஏதம் அறைகுறளும் உடனே வரும் - பலர்கூடி வீடு
கட்டினால் அதற்குக் குறைசொல்கின்ற கோளனும் அங்கு விரைந்து
வருவான்; ஏனை நல்பெரியோர்கள் போசனம் செயும் அளவில் ஈ கிடந்து
இடைகேடதுஆம - மற்றும், நற்குணம் உடைய பெரியோர்கள் அமர்ந்து
உணவு கொள்ளும்போது (அவ்வுணவில்) ஈயிறந்து கிடந்து (உணவின்)
தூய்மையை ஒழித்துவிடும்; இன்பம்மிகு பசுவிலே கன்று சென்று ஊட்டுதற்கு
இனிய கோன் அது தடுக்கும் - இன்பந்தரும் பசுவினிடத்திலே கன்று
சென்று ஊட்டமுடியாமல் (அக்கன்றுக்கு) இனியவனான இடையனே
அதனைத் தடுப்பான்; சேனை மன்னவர் என்ன கருமம் நியமிக்கினும்
சிறியோர்களால் குறைபடும் - படையையுடைய அரசர்கள் எத்தொழிலைச்
செய்ய ஆணையிடினும் அற்பர்களான வேலைக்காரர்களால் அஃது
இழிவடையும்; சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை செய்தது ஒரு
நரி அல்லவோ? - சிங்கத்திற்கும் பேரெருது ஒன்றிற்கும் பகையை
உண்டாக்கியது ஒருசிறு நரிதானே?
(விளக்கவுரை)
‘ஆயிரம்பேர்'
என்பது எண்ணிக்கை காட்டியதன்று;
‘பலர்' என்பதற்குக் காட்டப்பட்ட மொழி ‘கட்டின வீட்டிற்குக் குற்றஞ்
சொல்வோரும் ஆக்கின சோற்றுக்குப்பதஞ் சொல்வோரும் பலர்' என்பது
உலக வழக்கு.
|