(இ-ள்.) குடி படையில் அபிமானம் - குடிகளிடத்தும்
படை
வீரரிடத்தும் பற்றும், மந்திர ஆலோசனை - நுண் கருத்துக்களைத் தானே
ஆழ்ந்து ஆராயும் திறமையும், குறிப்பு அறிதல் - மற்றவர் மனத்திலுள்ளதை
முகக் குறிப்பால் அறிதலும், சத்திய வசனம் - உண்மையான பேச்சும்,
கொடை - மனமுவந்து கொடுத்தலும், நித்தம் - எப்போதும், அவரவர்க்கு
ஏற்ற மரியாதை - அவரவர்கட்குத் தக்கவாறு மதிப்பளித்தலும், பொறை -
பொறுமையும், கோடாத சதுர் உபாயம் - தவறாத நால்வகைச் சூழ்ச்சிகளும்,
படி விசாரணையொடு - நாட்டின் நிலையை வினவி அறிதலும், பிரதானி
தளகர்த்தரைப் பண்பு அறிந்தே அமைத்தல் - தன் கீழ் உள்ள
அலுவலாளரையும் படைத்தலைவரையும் அவர்களுடைய தகுதி அறிந்து
வேலையில் அமைத்தலும், பல்லுயிர் எலாம் தன் உயிர்க்கு நிகரென்றே
பரித்தல் - பலவகை உயிர்களையும் தன்னுடைய உயிர்க்கு ஒப்பாகக்
காப்பாற்றுதலும், குற்றங்கள் களைதல் - (அரசாட்சியில் நேரும்) பிழைகளை
உடனே நீக்குதலும், தனக்கு உறுதியான துடி பெறு நட்பு - தனக்கு
நன்மையை நாடும் சுறுசுறுப்பான நட்பைத் தேடிக்கொள்வதும், அகம்
இன்மை - செருக்கு இல்லாமையும், சுகுணமொடு கல்வி அறிவு - நல்ல
பண்புடன் கற்றுத் தேர்ந்த அறிவும், தோலாத காலம் இடம் அறிதல் -
தோல்வியடையாதவாறு காலத்தையும் இடத்தையும் அறிதலும், வினை வலி
கண்டு துட்ட நிக்கிரகம் - இருவருடைய போர்த்தொழிலின் வலிமையையும்
அறிந்து தீயவர்களை அழிக்கின்ற, சௌரியம் - திறமையும், இது - இவை
போன்றவைகளும், வடிவு பெறு செங்கோல் நடத்தி வரும் அரசர்க்கு -
செம்மையான சிறந்த ஆட்சியைப் புரியும் மன்னவர்கட்கு, வழுவாத
முறைமை - தவறாத நெறிகளாகும்.
(விளக்கவுரை)
நால்வகைச் சூழ்ச்சி: இனிமையாகப் பேசுதல்
(சாமம்)
வேறுபடுத்தல் (பேதம்) பொருள் கொடுத்தல் (தானம்) ஒறுத்தல் (தண்டம்)
பகைவரை இந்த நால்வகையுள் ஒன்றால் ஏற்றவகையில் வெல்வது அரசர்
கடமை.
|