(இ-ள்.)
தினம் செங்கைதனில் மழுவைத்த கங்காளன் அருள்
மைந்தன் என வந்த முருகா! - எப்போதும் அழகிய கையில் மழுவை
யேந்திய சிவபிரான் அருளிய திருமகன் எனத் தோன்றிய முருகனே!,
மயிலேறி.........குமரேசனே!-, அப்பா, எழுத்து அசைகள் சீர்தளைகள் அடி
தொடைகள் சிதையாது இருக்கவே வேண்டும் - (புலவர் அறிந்த)
அச்செய்யுள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை எனும்
உறுப்பிலக்கணம் கெடாமல் இருத்தல் வேண்டும்; ஈரைம் பொருத்தமொடு
மதுரமாய்ப் பளபளப்பு இனிய சொற்கு அமையவேண்டும் - பத்துப்
பொருத்தமும் இனிமையும் விளக்கமும் அழகிய சொற்களுமாகப் பொருந்த
வேண்டும்; அழுத்தம்மிகு குறளினுக்கு ஒப்பாகவே பொருள் அடக்கமும்
இருக்கவேண்டும் - ஆழ்ந்த பொருள்மிகுந்த திருக்குறளைப்போலப்
பொருளடக்கியும் இருத்தல்வேண்டும்; அன்பான பாவினம் இசைந்துவரல்
வேண்டும் - அன்பு மிக்க பாவும் இனமும் ஒத்திருத்தல் வேண்டும்; முன்
அலங்காரம் உற்றதுறையில் பழுத்து - பழமையான அணிபொருந்திய
நெயியிலே முதிர்ந்து, உளம் உவந்த ஓசை உற்றுவரல் வேண்டும் -
மனம்மகிழும் ஒலியமைந்து வருதல் வேண்டும்; படிக்கும் இசை
கூடல்வேண்டும் - படிப்பதற்கு இனிய நடை பொருந்தவேண்டும்; பாங்காக
இன்னவை பொருந்திடச் சொல கவிதை பாடின் சிறப்பு என்பர் - ஒழுங்காக
இவைகள் அமையுமாறு சொல்லப்படும் செய்யுள் பாடினால் நன்று என்பர்
புலவர்.
(விளக்கவுரை)
கங்காளம் (வட) - முதுகெலும்பு. கங்காளன்;
எலும்பணிந்த சிவபிரான். இரண்டு + ஐந்து + பொருத்தம் ஈரைம் பொருத்தம்.
அவை : மங்கலம், சொல், எழுத்து, தானம் பால், உணா, வருணம், நாள், கதி,
கணம், எனப்படும். பா: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா
என ஐவகைப்படும். ஒவ்வொரு பாவிற்கும் தாழிசை, துறை, விருத்தம் என
மூவகை இனங்களுண்டு. மருட்பாவிற்கு மட்டும் இல்லை.
(கருத்து)
பாக்கள் இங்குக் கூறியவாறு அமைதல்வேண்டும்.
|