பக்கம் எண் :

153

கொளும் பிதிர்க்கு இடுதலாலும் - ஏற்றுக்கொள்ளும் தென்புலத்தார்க்குக்
கொடுப்பதாலும், தெய்வங்களுக்குத் தேடியே ஈதலாலும் - தெய்வங்களை
நாடி வழிபாட்டுப் பொருள் கொடுப்பதாலும், தியாகம் கொடுத்தலாலும் -
வறியோர்க்கு வழங்குவதாலும், சிறியோர்கள் செய்திடும் பிழையைப்
பொறுத்துச் சினத்தைத் தவிர்த்தலாலும் - (அறிவிற்) சிறியோர் புரியும்
தப்புகளை மன்னித்துச் சீற்றத்தை விடுதலாலும், நாடியே தாழ்வாய்
வணங்கிடுதலாலும் - (பெரியோரைத்) தேடித் தாழ்ந்து வணங்குவதாலும், மிக
நல்வார்த்தை சொல்லலாலும் - சாலவும் இனிய மொழி இயம்பலாலும்,
நன்மையே தரும் அலால் தாழ்ச்சிகள் தரா - நன்மையே உண்டாகுமன்றிக்
குறைவுகள் உண்டாகமாட்டா; இவை நல்லோர்கள் செய்யும் முறைமை -
இவைகள் நல்லோர்களின் இயல்புகள்.

     காண் : முன்னிலை அசைச்சொல்.

     (விளக்கவுரை) தென்புலத்தார் (பிதிரர்) : நம் முன்னோர்களில்
இறந்தவர்கள். அவர்களுக்கு இடுதலாவது அவர்களுடைய ஆன்மா
அமைதியடைய வறியோருக்குக் கொடுத்தல். ‘தென்புலத்தார் தெய்வம்
விருந்து ஒக்கல் என்றாங்கு - ஐம்புலத்தா றோம்பல் தலை' என்றார்
வள்ளுவர்.

               நக்கீரனுக்கு அருளிய கதை:

     திருத்தலயாத்திரை சென்ற நக்கீரர் ஒரு பொய்கைக்கரை மீது
சிவபூசை செய்துகொண்டிருந்தார். அப்போது அப்பொய்கையில் ஓரிலை
ஆலமரத்திலிருந்து விழுந்தது. அது தண்ணீருக்குள் மறைந்தபகுதி
மீனாகவும் மறையாத பாகம் பறவையாகவும் மாறியது. அவ்வியப்பினாலே
சிவபூசையில் வழுவிய நக்கீரரைக் குதிரை முகமுடைய பெண்பூதம் ஒன்று
தூக்கிச் சென்று குகையில் வைத்துச் சென்றது. அதற்குமுன் பலர் அவ்வாறு
அங்கு அகப்பட்டிருந்தனர். எல்லோரையும் பூதம் கொல்லும் என்று அறிந்த
நக்கீரர் மனம்நொந்து திருமுருகாற்றுப்படை பாடினார். முருகன் வேலை
யேவி அப்பூதத்தைக் கொன்றார். இவ்வாறுள்ள புராணக்கதை இங்குக்
குறிப்பிடப்படுகிறது.

     (கருத்து) ஒற்றுமையாக வாழ்வது முதலாக இங்குக் கூறப்பட்டவை
நல்லோருடைய பண்புகள்.                              (96)