97. அடைக்கலம் காத்தல்
அஞ்சல்என
நாயினுடல் தருமன் சுமந்துமுன்
ஆற்றைக் கடத்துவித்தான்
அடைக்கலம் எனும்கயற் காகநெடு மாலுடன்
அருச்சுனன் சமர்புரிந்தான்
தஞ்சம்என
வந்திடு புறாவுக்கு முன்சிபி
சரீரம் தனைக்கொடுத்தான்
தடமலைச் சிறகரிந் தவனைமுன் காக்கத்
ததீசிமுது கென்பளித்தான்
இன்சொலுட
னேபூத தயவுடையர் ஆயினோர்
எவருக்கும் ஆபத்திலே
இனியதம் சீவனை விடுத்தாகி லும்காத்
திரங்கிரட் சிப்பர் அன்றோ
வஞ்சகிர
வுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன்
வளர்சூரன் உடல்கீண்டவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|