பக்கம் எண் :

30

வனமதில் உதிப்பினும் தீஞ்சொல்புகல் குயிலாகுமோ - காகம் அழகிய
மலர்ப் பொழிலிற் பிறந்தாலும் இனிமையாகக் கூவும் குயிலாய்விடுமோ?,
கொட்டி திரையெறியும் வாவியிற் பூத்தாலும் செங்கஞ்சமலர் ஆகுமோ -
கொட்டிமலர் அலைவீசும் பொய்கையிலே மலர்ந்தாலும் செந்தாமரை
மலரைப்போற் சிறப்புறுமோ?, முயலானது அம் கானகத்தில் பிறந்தாலும்
ஆனையின் கன்று ஆகுமோ - முயல் அழகிய காட்டிலே பிறந்தாலும்
யானைக்கன்றைப்போல் மதிக்கப்படுமோ?, அசடர் ஆண்மையாகிய நல்ல
குடியில் பிறந்தாலும் பெரியோர் ஆவரோ - பேதைகள், வீரம் பொருந்திய
உயர்ந்த மரபிலே பிறந்தாலும் பெரியோராக நினைக்கப்படுவரோ?, சங்கு
ஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாலக்கிராமமாமோ - சங்குகள்
உலாவும் பாற்கடலிலே தோன்றினாலும் நத்தையைச் சாலக்கிராமம்
என்பார்களோ?, தடம் மேவு கடல் நீரிலே உப்புவிளையினும் சாரசர்க்கரை
ஆகுமோ - பரவிய கடலிலே உப்புத் தோன்றினாலும் இனிய சர்க்கரைபோல்
இனிக்குமோ?

     (விளக்கவுரை) சிங்காரம் (வட) - அழகு. ‘தீஞ்சொல் புகல் குயில்'
என்பதைவிடத் ‘தீங்குரற்குயில்' எனக் கூறுவது சிறப்பாகும். குயில்
கூவுமேயொழியப் பேசாது. சாலக்கிராமம் என்பது திருமாலடியார்க்கு
விருப்பமான ஒரு பொருள். அது கருமையாகக் கூழாங்கல்லைப் போல்
இருக்கும். அது திருமாலின் நிறத்தை நினைப்பிப்பதாற் சிறப்புற்றிருக்கலாம்.
அது தெய்வத் தன்மையுடைய தென்பர். தடம் - விரிவு. இந்நூலாசிரியர்க்குச்
சர்க்கரையின்மேற் சால விருப்பம் போலும். உப்புப் பயன்படும் நிலையையும்
அதனால் உளதாகும் நன்மையையும் சர்க்கரை பயன்படும் நிலையையும்
நன்மையையும் ஒப்பிட்டோர், உப்பைச் சர்க்கரையினும் இழிவாகக் கூறார்.
உப்பில்லாமல் உண்ணவே இயலாது. எளியோர்க்குக் கிடைப்பதும் அதுவே.
சர்க்கரை யில்லாமல் ஒருவன் வாழ்க்கையையே நடத்திவிடலாம்,
அகத்தியருக்கு முருகக்கடவுள் செந்தமிழை அறிவித்ததாகப் புராணம் புகலும்.

     (கருத்து) பிறப்பினால் மட்டும் ஒருபொருள் மேன்மையுறாது; தன்
செயலினாலேதான் மேன்மையுறும்.                       (15)