பக்கம் எண் :

33

துங்கமணி சாணையில் தேய்ந்துவிட் டாலும்
     துலங்குகுணம் ஒழியாதுபின்
தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது
     தூயநிறை தவறாகுமோ

மங்கள கல்யாணிகுற மங்கைசுர குஞ்சரியை
     மருவு திண் புயவாசனே
மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மங்கள கல்யாணி குறமங்கை சுரகுஞ்சரியை மருவு திண்புய
வாசனே - அழகிய நலம்பெற்ற வேடர்குல வள்ளியும் வானவர் குடிவிளங்குந்
தெய்வயானையும் தழுவும் வலிமைமிக்க தோள்களை யுடையவனே!,
மயிலேறி......குமரேசனே! -, தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும்தன்
ஒளி மழுங்கிடாது - நெருப்பிலே பொன்கிடந்து உருகித் துன்புற்றாலும்
அதன் ஒளியிலே குறையாது; சந்தனக்குறடு தான் மெலிந்து தேய்ந்தாலும்
தன் மணம் குன்றிடாது - சந்தனக்கட்டை தேய்ந்து மெலிந்தாலும் அதன்
மணத்திலே மாறாது; பொங்கமிகு சங்கு செந்தழலில் வெந்தாலுமே
பொலிவெண்மை குறைவு உறாது - உயர்வுபெற்ற சங்கு சிவந்த நெருப்பில்
வெந்தாலும் அழகிய வெண்மை விலகாது; போதவே காய்ந்து நன்பால்
குறுகினாலும் பொருந்துசுவை போய்விடாது - நல்ல பால் மிகவும் காய்ந்து
குறைந்தாலும் அதனிடமுள்ள இனிமை குறையாது; துங்கமணி சாணையில்
தேய்ந்து விட்டாலும் துலங்கு குணம் ஒழியாது - உயர்ந்த மாணிக்கம்
சாணையிலே தேய்வுற்றாலும் ஒளிமிகும் பண்பு விலகாது; தொன்மைதரு
பெரியோர் மடிந்தாலும் அவர்களது தூய நிறை பின் தவறு ஆகுமோ -
பழைமையான சான்றோர்கள் இறக்கநேர்ந்தாலும் அவர்களது நல்லொழுக்கம்
இழிவுற்றுக் கெடுமோ?

     (அருஞ்சொற்கள்) திண்மை - உறுதி. தழல் - நெருப்பு, மறுகுதல் -
துன்புறுதல். குறடு - கட்டை. பொங்கம் - உயர்ச்சி.