பக்கம் எண் :

1

திருப்புல்வயல்

குமரேச சதகம்

மூலமும் உரையும்

தொடருரை

     குமரேச சதகம் என்பது மூன்று சொற்களாலும் இரண்டு சந்திகளாலும்
ஆன தொடர். முன்னது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை; பின்னது
ஆறாம் வேற்றுமைத்தொகை. (குமரனாகிய ஈசன், குமரேசனது சதகம்).

     சதகம் என்பது நூறு செய்யுட்களால் உலகியல்பற்றி வரும் ஒருவகை
நூல். சதம் - நூறு. சதகம் - நூறு செய்யுட்களைக் கொண்டது.

    "விளையு மொருபொருள் மேலொரு நூறு
    தழைய உரைத்தல் சதகம் என்ப," - (இலக்கண விளக்கம்.)

ஒரு பொருளென்பது அகம் புறம் என்னும் இருவகைகளில் ஒன்றைப்
பற்றியது. இந்நூல் புறப்பொருள் பற்றியது. குமரேசனைத் தலைவனாக
அமைத்து இந்நூலைச் செய்திருப்பதாற் குமரேச சதகம் எனப்பட்டது.
அஃதாவது குமரக் கடவுளை வாழ்த்தும் முறையிலே எழுதப் பெற்றதென்க.