பக்கம் எண் :

37

     (விளக்கவுரை) காண் : முன்னிலையசைச்சொல். திருமாலின்
பெண்கள் இருவர் முருகனையடையத் தவஞ்செய்து வானவரிடம்
தெய்வயானையாக ஒருவரும், மான் வயிற்றிற் பிறந்து வேடர்குடியில்
ஒருவருமாக வளர்ந்தனர். ஆகையால் வள்ளியம்மையை மாதவகுமாரி
என்றார். சாரங்கம் - மான். சரசன் - இனியவன். புல்குதல் - தழுவுதல்.
மறு - குற்றம். விரோசனம் - வயிற்றுப் போக்கு மருந்து. மொய்த்தல் -
நெருங்குதல். (அடத்தியாக இருத்தல்) குழல் - கூந்தல். சையோகம் -
சேர்க்கை. உடம்பினிடம் உழைப்பு வாங்குவோர் அது நீடித்திருக்கவும்
நினைக்க வேண்டுமாகையால் அதனிடம் இரக்கங் காட்டவேண்டும்
என்பதற்காகத் தயையாக உலாவல் என்று கூறினார்.

     (கருத்து) இச்செய்யுளிலே கூறப்பட்டவை உடல் நலந்தரக் கூடியவை.
                                                           (19)

          20. விடாத குறை

தேசுபெறு மேருப்ர தட்சணஞ் செய்துமதி
     தேகவடு நீங்கவில்லை
திருமால் உறங்கிடும் சேடனுக்கு வணன்
     செறும்பகை ஒழிந்த தில்லை

ஈசன் கழுத்திலுறு பாம்பினுக்கி ரைவே
     றிலாமலே வாயுவாகும்
இனியகண் ஆகிவரு பரிதியா னவனுக்
     கிராகுவோ கனவிரோதி

ஆசிலாப் பெரியோ ரிடத்தினில் அடுக்கினும்
     அமைத்தபடி அன்றிவருமோ
அவரவர்கள னுபோகம் அனுபவித் திடல்வேண்டும்
     அல்லால் வெறுப்பதெவரை

வாசவனும் உம்பரனை வரும்விசய சயஎன்று
     வந்துதொழு தேத்துசரணா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.