பக்கம் எண் :

39

மோகினி வடிவம் எடுத்தார். அவுணர்கள் அமுதத்தை விட்டு அவளை
விரும்பிச் சூழ்ந்தனர். மோகினியானவள் அமரருக்கு மட்டும் அமுதம்
பங்கிட்டாள். மயங்கிய அவுணர் உணர்வின்றி நின்றுவிட்டனர். அவர்களில்
ஒருவன்மட்டும் உணர்வுபெற்று அமரருடன் கலந்து அமுதம் பெற்றான்.
அவன் அவுணன் என இரவியும் திங்களும் மோகினியிடம் விளம்பினர்.
மோகினி அகப்பையாலே அந்த அவுணனைப் பிளந்தாள். அவன் இரு
கூறினான். எனினும் அமுதம் உண்டதனால் இறக்கவில்லை. இருகூறும்
இராகு கேது என்னும் பெயருடன் இரவியையுந் திங்களையும் ஆண்டுதோறும்
விழுங்குவதென்று தவத்தின்மூலம் வரம்பெற்ற பாம்பாகின. இவ்வாறு புராணம்
கூறும்.

     (கருத்து) அவரவர் வினைப்பயனை அவரவர்களே நுகர்ந்து கழித்தல்
வேண்டும்.                                             (20)

         21. சிறவாதவை

குருவிலா வித்தைகூர் அறிவிலா வாணிபம்
     குணமிலா மனைவியாசை
குடிநலம் இலாநாடு நீதியில் லாவரசு
     குஞ்சரம்இ லாதவெம் போர்

திருவிலா மெய்த்திறமை பொறையிலா மாதவம்
     தியானம்இல் லாதநிட்டை
தீபம்இல் லாதமனை சோதரம்இ லாதவுடல்
     சேகரம்இ லாதசென்னி

உருவிலா மெய்வளமை பசியிலா உண்டிபுகல்
     உண்மையில் லாதவசனம்
யோசனை இலாமந்த்ரி தைரியம் இலாவீரம்
     உதவியில் லாதநட்பு

மருவிலா வண்ணமலர் பெரியோ ரிலாதசபை
     வையத்தி ருந்தென்பயன்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.