பக்கம் எண் :

43

பேயும் - கடன் கொடுத்தோர் கடனைக் கேட்கும்போது முகத்தைச் சுளிக்கும்
பேயும், கனம்மருவு பெரியதனம் வந்தவுடன் இறுமாந்து கண்விழிக்காத
பேயும் - மேன்மையைத் தரும் பெருஞ் செல்வங் கிடைத்தவுடன் செருக்குற்று
வந்தவர்களை நோக்காத பேயும், அடைவுடன் சத்துருவின் பேச்சை
விசுவாசித்து அகப்பட்டு உழன்ற பேயும் - பகைவன் சொல்லை ஒழுங்காக
நம்பிச் சிக்கி வருந்துகின்ற பேயும், ஆசை மனையாளுக்கு நேசமாய்
உண்மை மொழியானதை உரைத்த பேயும் - காதல் மனைவியின் மேலுள்ள
அன்பினாலே உண்மைச் செய்தியை உரைத்த பேயும், இடர் இலா
நல்லோர்கள் பெரியோர்களை சற்றும் எண்ணாது உரைத்த பேயும் -
(மற்றவர்களுக்குத்) துன்பம் புரியாத நல்லோர்களையும் பெரியோர்களையும்
சிறிதும் மதியாமல் இகழ்ந்து பேசிய பேயும், இனிய பரிதானத்தில் ஆசை
கொண்டு ஒருவற்கு இடுக்கண் செய்திட்ட பேயும் - இனியதாகத் தோற்றும்
இலஞ்சத்திலே ஆசைப்பட்டு ஒருவனுக்குத் தீமை செய்யும் பேயும், மடமனை
இருக்கப் பரத்தையைப் புணர்பேயும் - இளமைப்பருவமுடைய இல்லாள்
இருக்கவும் விலைமாதைக் கூடுகின்ற பேயும், வசைபெற்ற பேய்கள் அன்றோ
- இழிவுற்ற பேய்கள் அல்லவா?

     (விளக்கவுரை) பேய்போன்றவர்களைப் பேயெனவே அஃறிணையாலே
இழிவுபற்றிக் கூறினார். அன்பிற்சிறந்த மனையாளிடம் உண்மையைக்
கூறக்கூடாது என்பது பெண்களின் உள்ளத்திலே எதுவும் மறைத்திராது
என்னும் தவறான கொள்கை பற்றியது. வாழ்க்கைத்துணைநலமாக வரும்
மனைவிக்குந் தெரியாமல் மறைத்து வைக்கக்கூடியது எது? ‘விறல்மந்திரி மதி'
உடைய துணைவியை இழித்துரைக்கும் இக்கொள்கை மிகப்பெருந் தவறு.

     (கருத்து) கடன் கொடுத்தவனிடம் இன்மொழி புகலவேண்டும். செல்வம்
வந்தாலும் மற்றவருடன் பணிவுடன் நடந்து கொள்ளல் வேண்டும். பகைவர்
பேச்சிலே நம்பிக்கை வைத்தலாகாது. நல்லோரையும் பெரியோரையும்
இகழ்தல் கூடாது. இலஞ்சம் வாங்கிக்கொண்டு பிறருக்குத் தீமை செய்தல்
ஆகாது. விலைமாதர் நட்புக்கூடாது.                               (23)