(இ-ள்.)
மயிலேறி.........குமரேசனே! -, அனைவர்க்கும் உபகாரம் ஆம்
வாவிகூபம் உண்டாக்கினோர் - யாவருக்கும் பயன்படுமாறு குளங்களும்
கிணறுகளும் தோண்டியவர்களும், நீதிமன்னர் - செங்கோல் தவறாத
அரசர்களும், அழியாத தேவ ஆலயம் கட்டிவைத்துள்ளோர் - கெடாத
தெய்வத் திருக்கோயில்களைக் கட்டியவர்களும், அகரங்கள் செய்த
பெரியோர் (காட்டை அழித்து) நகரங்களை உண்டாக்கிய சான்றோர்களும்,
தனை ஒப்பிலாப் புதல்வனைப் பெற்ற பேர் - உவமையற்ற மகனைப்
பெற்றவர்களும், பொருது சமர்வென்ற சுத்தவீரர் - போரிலே சண்டையிட்டு
வென்ற தூய வீரர்களும், தரணிதனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத
தருமங்கள் செய்த பேர்கள் - உலகிலே எப்போதும் நிலைத்திருக்கக்
கெடுதியற்ற அறச்செயல்கள் செய்த சான்றோர்களும், கனவித்தை
கொண்டவர்கள் - பெருங் கலைப் பயிற்சியாளர்களும், ஓயாத
கொடையாளர் - மாறாமற் கொடுப்பவர்களும், காவியம் செய்த கவிஞர் -
காவியங்களை எழுதிய கவிகளும், கற்பினில் மிகுந்தவொரு பத்தினி
மடந்தையைக் கடிமணம் செய்தோர்கள் - கற்பிலே சிறந்த ஒரு
நல்லொழுக்கமுள்ள பெண்ணைத் திருமணம் புரிந்தவர்களும்,
இம்மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும்
அன்றோ - இவர்கள் இந்த ஊனுடல் ஒழிந்தாலும் புகழுடல் பொன்றாத
மக்கள் ஆவார்கள் அல்லவா?
(விளக்கவுரை)
அகரம் என்பது ஊர் என்னும் பொருளில் மட்டும்
வந்துள்ளது; அந்தணர் குடியிருக்குமிடம் என்பது பொருந்தமன்று.
இக்காலத்தும் அகரம் எனப் பல பெயர்கள் ஊர்களுக்கிருக்கின்றன. கூபம் -
கிணறு. தரணி - புவி. கவி - செய்யுளியற்றும் புலவன்.
(கருத்து)
இங்குக் கூறப்பட்டவர்கள் புகழுடம்பு பெற்று இறவாது
நிற்பவர்கள். (31)
|