மடவா ரிடத்திலும்
குடிகொண்டு திருமாது
மாறா திருப்பள் அன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மயிலேறி........குமரேசனே!-,
கடவாரணத்திலும் -
மதயானையினிடத்திலும், கங்காசலத்திலும் - கங்கையாற்றிலும் (தூய நீரிலும்),
கமலாசனந் தன்னிலும் - தாமரைமலராகிய பீடத்திலும், காகுத்தன் மார்பிலும்
- திருமாலின் மார்பிலும், கொற்றவரிடத்திலும் - அரசரிடத்திலும், காலியின்
கூட்டத்திலும் - ஆனிரையிலும், நடமாடு பரியிலும் - நடையிற்சிறந்த
குதிரையினிடத்திலும், பொய்வார்த்தை சொல்லாத நல்லோரிடந் தன்னிலும் -
பொய் கூறாத நற்பண்புடையவரிடத்திலும், நல்ல சுபலக்கணம் மிகுந்த
மனைதன்னிலும் - சிறந்த நல்லழகுடைய வீட்டிலும், இரணசுத்த வீரர்பாலும்
- போருக்குரிய உயர்ந்த வீரரிடமும், அடர் கேதனத்திலும் - மிகுந்த
வெற்றிக் கொடியினிடமும், சுயம்வரந்தன்னிலும் - திருமணத்திலும்,
அருந்துளசி வில்வத்திலும் - அரிய திருத்துழாயிலும் வில்வத்திலும்,
அலர்தரு கடப்பமலர்தனிலும் - மலர்ந்த கடப்பமலரிலும், இரதத்திலும் -
தேரிலும், அதிககுணமானரூப மடவாரிடத்திலும் - மிகுந்த நல்ல குணமும்
அழகு முடைய பெண்களிடமும், திருமாது குடிகொண்டு மாறாது இருப்பள்
அன்றோ? - இலக்குமி குடியாகி நீங்காமல் இருப்பாள் அல்லவா?
(விளக்கவுரை)
கடம்
- மதம். வாரணம் - யானை. காகுத்தன்
என்பவன் மரபிலே திருமால் இராமனாகப் பிறந்தார். ஆகையாற் காகுத்தன்
எனப்பட்டார். காலி - பசுமந்தை. கேதனம். - கொடி. சுயம்வரம் : ஒருபெண்
தானே தன் கணவனைத் தேர்ந்தெடுத்தல். சுயம் - தானாவே. வரம் -
வரித்தல். வரிக்கப்பட்டவனை வரன் என்பர். துளசி - திருமாலுக்கும்,
வில்வம் சிவபிரானுக்கும். கடம்பு முருகனுக்கும் உரியவை. மடம் - இளமை.
மடவார் - இளம் பெண்கள்.
(கருத்து)
யானை முதலான இடங்களில் திருமகள் குடியாக
இருப்பாள். (செல்வம் இருக்கும்). (35)
|