பக்கம் எண் :

64

மட்டிகட் காயிரம் புத்திசொன் னாலும்அதில்
     மார்க்கமரி யாதைவருமோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மயிலேறி.............குமரேசனே! -, கட்டி எருஇட்டுச்
செழுந்தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்புவிடுமோ - வெல்லக்கட்டியாகிய
எருவைவிட்டு நல்ல தேனாகிய நீரை வார்த்தாலும் எட்டியின் கசப்பு நீங்குமா?
கழுதையைக் கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும் கதிபெறுங்குதிரை ஆமோ -
கழுதையைக் கட்டிவைத்து வேள்வி செய்தாலும் பல கதிகளிலுஞ் செல்லும்
பரியாகுமோ?, குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடுவிடம்
அலாது தருமோ - பாம்புக்குட்டிக்குப் பால்வார்த்து வளர்த்தாலும் கொடிய
நஞ்சையல்லாது வேறொரு நன்மையைத் தருமா?, குக்கல் நெடுவாலுக்கு
மட்டையைக் கட்டினும் கோணாமலே நிமிருமோ - நாயின் நீண்ட வாலுக்கு
மட்டைவைத்துக் கட்டினாலும் கோணல் நிமிருமா?, ஒட்டியே குறுணி மை
இட்டாலும் நயமிலா யோனி கண் ஆகிவிடுமோ - மிகுதியான மையை
நன்றாக இட்டாலும் பெண்குறி கண் ஆகுமே?, உலவுகன கற்பூர வாடைபல
கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ - இனிய மணம்வீசும் கர்ப்பூரம்
முதலான நறுமணப் பொருள்களைச் சேர்த்தாலும் பூண்டின் மணம் மாறுமா?,
மட்டிகட்கு ஆயிரம் புத்திசொன்னாலும் அதில் மார்க்கமரியாதை வருமோ -
அறிவில்லாத பேதைகளுக்குப் பலமுறை அறிவு புகட்டினாலும் அதனால்
ஒழுங்கான நாகரிகம் உண்டாகுமோ?

     (அருஞ்சொற்கள்) கட்டி - வெல்லக்கட்டி. காஞ்சிரம் - எட்டி. கதி -
குதிரைசெல்லும் நிலை. குக்கல் - நாய். வாடை : மணம். உள்ளி - பூண்டு.

     (கருத்து) கீழ்மக்கட்கு நல்லறிவு புகட்டமுடியாது.          (37)