பக்கம் எண் :

77

எனா வாக்கிய பரிபாலனம் செய்தவன் தானகர்னன் - ஏழையென்று
வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாத சொல்லைக் காப்பாற்றியவன்
கொடையாளியாகிய கன்னன்; நிந்தைதவிர் வாக்கியபரிபாலனம் செய்வதன்
நீள்பலம் மிகுந்த அனுமான் - பழியற்ற (இராமனுடைய) சொல்லைக்
காப்பாற்றியவன் மிக்க வலிமைபெற்ற அனுமான்; நிறையுடன் பத்தாவின்
வாக்கியபரிபாலனம் நிலத்தினில் நளாயினி செய்தாள் - ஒழுக்கத்துடன்
கணவன் சொல்லை உலகத்தில் நளாயினி காப்பாற்றினாள்.

     (விளக்கவுரை) இராமன் தன் தந்தையான தசரதன் சொல்லைக்
காப்பாற்றக் காட்டிற்குப் பதினாலு ஆண்டுவரை சென்றிருந்தான்.
பொறுங்கள் என்று தருமன் கூறியபொழுதெல்லாம் வீமன் அருச்சுனன்
நகுலன் சகாதேவன் என்னும் நால்வரும் அணைகடவாத
வெள்ளம்போலிருந்தனர். அரிச்சந்திரன் தன் ஆசிரியனான வசிட்டன்
சொல்லைக் காப்பதற்குப் பொய்யாநெறி பூண்டான். இறக்கும் நிலையிலும்
தன் அறத்தின் பயனையுங் கொடுத்தான் கன்னன்.

     (கருத்து) பெரியோர் சொல்லைத் தட்டாதவர் பெருமையடைவர்.
                                                 (45)

       46. தன் அளவே தனக்கு

வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒருகாசு
     மட்டன்றி அதிகமாமோ
வான்ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி
     வண்ணப் பருந்தாகுமோ

கங்கா சலந்தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்
     காய்நல்ல சுரையாகுமோ
கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின்
     காணுமோ நால்நாழிதான்

ஐங்காதம் ஓடினும் தன்பாவம் தன்னோடே
     அடையாமல் நீங்கிவிடுமோ
ஆரிடம் சென்றாலும் வெகுதொலைவு சுற்றினும்
     அமைத்தபடி அன்றிவருமோ.