பக்கம் எண் :

6

பிரணவ மந்திரத்தைச் சொல்லியருளியும், போதனைச் சிறையில்
வைத்தும் - நான்முகனைச் சிறையிலே அடைத்தும், தே மிக்க அரி அரப்
பிரமாதிகட்கும் செகுக்க முடியா அசுரனை - தேவர்களிற் சிறந்த திருமாலும்
சிவனும் நான்முகனும் போன்றவர்களாலே அழிக்க முடியாத சூரபதுமனை,
வடிவேலினால் தேகம் கிழித்து இருகூறு செய்து அமரர் சிறை தவிர்த்தும் -
கூரிய வேலினாலே உடலைப் பிளந்து இரு கூறாக்கி வானவருடைய
சிறையை விடுவித்தும், நேமிக்குள் அன்பர் இடர் உற்ற சமயந்தனில்
நினைக்குமுன் வந்து உதவியும் - உலகத்தில் அடியவர்கள் துன்பம்
அடைந்தபோது (அவர்கள்) நினைப்பதற்கு முன் வந்து அருள்புரிந்தும்,
நிதமும் மெய்த்துணையாய் விளங்கலால் உலகில் உனை நிகர் ஆன
தெய்வம் உண்டோ? - எப்போதும் உண்மையான ஆதரவாக இருப்பதால்
உலகத்தில் உனக்குச் சமமான தெய்வம் உண்டோ? (இல்லை).

     (விளக்கவுரை) ஆறு தலையாய் என்பதற்கு ஆறு தலைகளுடன்
என்றும் பொருள் கூறலாம்.

     கதை 1. ஆறு முகங்களுடன் முருகக் கடவுள் பிறந்த வரலாறு :
வானவர்கள் சூரபதுமனால் அடைந்த துன்பத்தை நீக்கச் சிவபிரான்
விரும்பினார். அவருக்கு ஐந்து முகங்களுண்டு. அவற்றோடு கீழ்நோக்கும்
முகம் ஒன்றை அமைத்துக்கொண்டு ஆறு முகமானார். அவருக்கு ஒவ்வொரு
நெற்றியிலும் கண்கள் இருந்தன. அவை நெருப்புக் கண்கள். மற்ற இரண்டு
கண்களும் ஞாயிறும் திங்களும் ஆகும். அந்த நெற்றிக் கண்களிலிருந்து
ஆறு பொறிகளை உண்டாக்கினார். அவைகள் கங்கையிலே மிதந்து சென்று
நாணற் பொய்கை ஒன்றிலே தங்கின. அவை அங்கே ஆறு குழந்தைகளாக
விளையாடின. அக்குழந்தைகளை உமையம்மையார் ஒன்றாக அணைத்தவுடன்
ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளுமுள்ள ஒரு குழந்தையாக அவைகள்
மாறின.

     கதை 2. நான்முகனைச் சிறையில் அடைத்தது: முருகக் கடவுள்
திருக்கைலையிலே குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது
நான்முகன் சிவபிரானை வணங்க அவ்வழியே வந்தான். அவன் தம்மை
வணங்காமல் இறுமாப்புடன் செல்வதைக் கண்ட முருகக் கடவுள் அவனைக்
கூப்பிட்டு, ‘உனக்கு மறைகள் தெரியுமா?'