பக்கம் எண் :

91

அதனை வளர்த்தவர்கள் அறிவார்கள்; கொடியதான பூனையும் அறியுமோ?
குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர்; கொடுமூடர் தாம்
அறிவரோ? - பழகத்தக்க சான்றோர்களின் சிறப்பை நற்பண்பினரே
அறிவார்கள்; கொடிய கயவர்கள் அறிவார்களோ?

     (விளக்கவுரை) ‘குரங்கின் கைப்பட்ட பூமாலை' ‘மக்கள் அருமை
மலடிஅறிவாளோ?' ‘கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்ததுபோல'
‘பாம்பின்கால் பாம்பறியும்' என்னும் பழமொழிகள் இங்குக் கருதத்தக்கன.
ஒருசந்தி - ஒருவேளை. (நோன்பு) ஒருவேளை புசிக்கும் நோன்பை ஒருசந்தி,
ஒருவேளை என்பது வழக்கம்.

     (கருத்து) அவ்வத்துறையில் உள்ளவர்களே அவ்வப் பொருள்களின்
சிறப்பை அறிவர்.                                         (54)

             55. தீச்சார்பு

மடுவினிற் கஞ்சமலர் உண்டொருவர் அணுகாமல்
     வன்முதலை அங்கிருக்கும்
மலையினில் தேன்உண்டு சென்றொருவர் கிட்டாமல்
     மருவிஅதில் வண்டிருக்கும்

நெடுமைதிகழ் தாழைமலர் உண்டொருவர் அணுகாமல்
     நீங்காத முள்ளிருக்கும்
நீடுபல சந்தன விருட்சம்உண் டணுகாது
     நீளரவு சூழ்ந்திருக்கும்

குடிமல்கி வாழ்கின்ற வீட்டினிற் செல்லாது
     குரைநாய்கள் அங்கிருக்கும்
கொடுக்கும் தியாகியுண் டிடையூறு பேசும்
     கொடும்பாவி உண்டுகண்டாய்

வடுவையும் கடுவையும் பொருவுமிரு கண்ணிகுற
     வள்ளிக் குகந்தகணவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.