பக்கம் எண் :

92

     (இ-ள்.) வடுவையும் கடுவையும் பொருவும் இரு கண்ணி
குறவள்ளிக்கு உகந்த கணவா - மாவின் வடுவையும் நஞ்சையும் போன்ற
இரு கண்களையுடைய வேடர்குல வள்ளியம்மைக்கு விருப்பமான கணவனே!,
மயிலேறி......குமரேசனே!-, மடுவினில் கஞ்சமலர் உண்டு, ஒருவர் அணுகாமல்
வன்முதலை அங்கு இருக்கும் - ஆழமான நீர் நிலையிலே தாமரைமலர்
இருந்தாலும், ஒருவரும் நெருங்காமற் கொடிய முதலை அந்த நீர்நிலையிலே
இருக்கும்; மலையினில் தேன் உண்டு, சென்று ஒருவர் கிட்டாமல் அதில்
வண்டு மருவி இருக்கும் - மலையிலே தேன் அடையிருக்கிறது எனினும்,
ஒருவரும் அதனிடம் அணுகாமல் தேனீக்கள் அந்த அடையிலே இருக்கும்;
நெடுமை திகழ் தாழைமலர் உண்டு, ஒருவர் அணுகாமல் நீங்காத
முள்இருக்கும் - நீண்டதாக விளங்கும் தாழையிலே மலர் உள்ளது எனினும்,
அதை ஒருவர் நெருங்கிப் பறிக்காமல் அத்தாழையிலே முள் நீங்காமல்
இருக்கும்; நீடுபல சந்தன விருட்சம் உண்டு, அணுகாது நீள் அரவு சூழ்ந்து
இருக்கும் - உயர்ந்த பல சந்தன மரங்கள் உள்ளன எனினும் அவற்றினிடஞ்
செல்லமுடியாமல் நீண்ட பாம்புகள் சூழந்து வாழும் : குடிமல்கி வாழ்கின்ற
வீட்டினில் செல்லாது குரைநாய்கள் அங்கு இருக்கும் - குடிகள் நிறைந்து
வாழும் மனையிலே புகமுடியாமல் அங்கே குரைக்கும் நாய்கள் காவலாக
இருக்கும்; கொடுக்கும் தியாகி உண்டு, இடையூறு பேசும் கொடும்பாவி
உண்டு - உதவிசெய்யும் கொடையாளி யிருக்கின்றான் எனினும், இடையூறு
செய்யுங் கொடியபாவியும் அங்கு உள்ளான்.

     (விளக்கவுரை) வடு - மாம்பிஞ்சு. கடு - நஞ்சு. பார்வை கொடியதாக
இருக்கும்போது (பிணங்கியபோது) நஞ்சுபோன்றும் இனிமையாக (அன்புடன்)
இருக்கும்போது மாவடுவைப் போன்றும் காதலர்களுக்கு ஒரு பெண்ணின்
கண் தோன்றும், ‘வாழ்கிற வீட்டிற்கு மறநாய்போல' என்னும் பழமொழியைக்,
‘குடி.......இருக்கும்' என்னுந் தொடர் நினைவு ஊட்டுகிறது.

     (கருத்து) ஒருவனுக்கு எண்ணமிருந்தாலுங் கொடுக்காமல் தடுக்கவும்
சூழலுண்டு.                                                (55)