பக்கம் எண் :

111

                 நெற்போர் வேவப்பாடியது

81.போயா தரவுட னெற்போர் கிடந்திடப் புற்றிரைச்சற்
றீயார வெந்து பொடிபட வென்றன்று செந்தமிழால்
ஓயாத வாக்கிதென் மங்கைச் சுவாமியென் றோர்புலவன்
வாயார வங்கதம் பாடின துங்கொங்கு மண்டலமே

     (க-ரை) விஜய மங்கலம் சுவாமிநாதப் புலவன், புற்றிரைச்சலுக்குப்
போய் அங்கிருந்த நெற்போர் சாம்பலாகுமாறு வசை பாடியதுங்
கொங்குமண்டலம் என்பதாம்.

     வரலாறு :- குறுப்பி நாட்டில் விஜயமங்கலத்துச் சாமிநாதப்
புலவன் என்பவன் பொன்கலூர் நாட்டுப் புற்றிரைச்சல் என்னும் ஊருக்குப்
போனான். அவ்வூரதிபனாக இருந்த முத்தான் என்பவனைக் கண்டு,
கஷ்டகாலமாயிருக்கிறது, தயவு செய்து நெல் உதவ வேண்டுமென்று
பலமுறை மிகப் பரிவுகொண்டு கேட்டனன். என்னிடத்திலில்லை
எனக்கடிந்தனன். தன்னிடத்தே நிரம்ப வைத்துக்கொண்டு அன்பு பாராட்டும்
புலவனுக்கு இல்லை யென்றதற்கு மிக வருத்தமுற்று ஒருவசை வெண்பாப்
பாடினன். அவனது நெற்போர்கள் தீப்பிடித்து வெந்து சாம்பலாய்விட்டது
என்பர்.

                      வசை வெண்பா.

                          (மேற்)

பாழ்த்தவவப் புற்றிரைச்சற் பாவிமுகத்தான் குன்றையொப்ப
வீழ்ந்தநெற்போர் வெண்பொடியாய் வேகவின்றே - வாழ்த்தக்
கொடாதா னிடாதான் குறுந்துணியுந் தோய்த்தே
உடாதான் பெருந்துயரு ளுற்று.

(தனிப்பாடல்)

                விஜயமங்கலம் உலகுடையான்

82.சொல்லிக் கனைய வகத்துறைக் கோவை சொனபுலவன்
பல்லக் கெடுத்துக் கழனியும் பொன்னும் பரிசளித்த
வெல்லப் படைத்தலை வீரனுலகுடை வீரனமர்
மல்லர்க் கினிய குறும்பணை நீள் கொங்கு மண்டலமே

     (க-ரை) இனிமையான அகத்துறைக் கோவை பாடிய புலவனுடைய
பல்லக்குச் சுமந்து வயனிலமும் பொருளும் பரிசு கொடுத்தவனான
படைத்தலை வேளாளர்களில் உலகுடையான் என்பவனது குறும்புநாடு
சூழ்ந்தது கொங்க மண்டலம்என்பதாம்.