பக்கம் எண் :

146

வள்ளல்களில் அதிகமான் மரபினர் தகடூர்ப் பகுதியையும் வல்வில் ஓரியும்
அவன் மரபினரும் கொல்லிமலைப் பகுதியையும், வையாவிக் கோப்பெரும்
பேகன் மரபினர் பழனிமலைப் பகுதியையும், குமண வள்ளல் மரபினர்
முதிரமலைப் பகுதியையும் ஆட்சிபுரிந்தனர். அக்காலத்தில் சேர வேந்தர்கள்
போராடிக் கொங்கு நாட்டைக் கைப்பற்றியிருக்கின்றனர்.

     பிற்காலத்தில், கங்கர், இரட்டர், பல்லவர், பிற்காலச் சேர மரபினர்
கொங்குச் சோழர், கொங்குப் பாண்டியர், ஹொய்சளர், விசய நகரத்தார்,
மதுரை நாயக்கர், மைசூர் உடையார் மரபினோர், முகமதியர் (திப்பு, ஹைதர்
அலி), ஆங்கிலேயர் ஆகியோர் முறையே ஆட்சி புரிந்தனர். தற்காலக்
கொங்கு சனநாயக ஆட்சியுட்பட்டிருக்கிறது.

தமிழ் வளர்த்தவர்கள்

     வள்ளல்களுக்குப் பின் கொங்கு நாட்டில் தமிழ் வளர்த்தோர்,
கம்பரை ஆதரித்து இராமாவதாரம் பாடுவித்த வெண்ணைநல்லூர்ச்
சடையனும், பவணந்தியைக் கொண்டு நன்னூல் செய்வித்த சீயகங்கனும்,
வில்லிபுத்தூராரை ஆதரித்துப் பாரதம் பாடுவித்த வக்கபாகை வரபதி
யாட்கொண்டானும் கொங்கு நாட்டிற்குரியவர்களாவார்கள்.

     சர்க்கரை மரபினர், காங்கேய மரபினர், பல்லவராய மரபினர்,
வேணாவுடையார் மரபினர் ஆகியோர் கொங்கு நாட்டில் புலவர் பலரை
யாதரித்துத் தமிழ் வளர்ச்சி செய்தவர்கள்.

புலவர்கள்

     சங்கப் புலவர்களில் கருவூர்ச் சேரமான் சாத்தன், கருவூர்க்கதப்
பிள்ளைச் சாத்தனார், செங்குன்றூர்க் கிழார் முதலியவர்கள் கொங்கு
நாட்டுப் புலவர்களே கொங்குவேளிர், அடியார்க்கு நல்லார், பவணந்தி
முதலியோர் கொங்கு நாட்டில் தோன்றி நூல் செய்த பெரும்
புலவர்களாவார்கள்.

நூல்கள்

     கொங்குவேள்மாக்கதை, நன்னூல், சிலப்பதிகாரவுரை, உரிச்சொல்
நிகண்டு, தக்கராமாயணம், திருத்தொண்டர் புராணச் சுருக்கம் முதலியன
இந்நாட்டிற்றோன்றிய நூல்களாம்.