வருவது கண்ட வேளாளர்கள்
கம்பரை வேண்டிக் காவிரியின் பிரவாகம்
குறையும்படி பாடவேண்டுமென்று கேட்கவும் கம்பர்,
"கன்னி
யழிந்தனள் கங்கைதிறம்பினள்
பொன்னி கரைகடந்து போயினளென் - றின்னீர்
உரைகிடக்கலாமோ வுலகுடைய தாயே
கரை கடக்க லாகாது காண். |
என்ற வெண்பாவைப்
பாடிக் காவிரியின் பிரவாகம் குறையும்படி செய்தனர்
என்பது. இவ்வரலாறுகள் கொங்கு நாட்டில் உள்ள வேளாளர்களுக்கும்
கம்பருக்குமுள்ள இயைபுகளை நன்கு விளக்குவனவாம். கம்பர் கொங்கு
நாட்டிற்கு வந்திருந்த பொழுது வேளாளர் வீட்டுத் திருமணங்களில்
மங்கலர்கள் பாடுதற்குறிய மங்கல வாழ்த்தும் புலவர் பாடுதற்குரிய திருமண
வாழ்த்தும்பாடித் தந்திருப்பரெனத் தெரிகின்றது.
கொங்கு
நாட்டு வேளாளர்கள் கம்பரிடத்தில் அதிக மதிப்பு
வைத்ததற்குக் காரணமாக மற்றொன்றும் கூறலாம்.
தங்கள்
மரபினனாகிய சடையனால் ஆதரிக்கப்பெற்றுத் தாம்
பாடிய இராமாவதாரத்தில் கம்பர், சடையனையும் சடையன் மரபினராகிய
வேளாளர்களையும் உயரிய இடங்களில் உயர்த்திக் கூறியிருப்பதாம்.
நூற்பதிப்பு
கொங்கு
நாட்டின் பழைய வரலாறுகளையறிய விரும்புவோருக்கும்,
வரலாற்று நூல் எழுதுவோருக்கும் உதவியாயிருக்கும்படி இந்நூல்
வெளியிடப்படுகின்றது.
நூற்பிரதிகள்
பழையகோட்டை
அரண்மனையிற் கிடைத்த ஏட்டுப் பிரதி யொன்றும்
வெள்ளோடு சாமிநாதப்புலவரெழுதி வைத்திருந்த குறைப் பிரதியொன்றும்,
பூந்துறை நாட்டுக் கொல்லப்பட்ட புலவர் வீட்டிற் கிடைத்த குறைப்
பிரதியொன்றும் திருச்செங்கோடு முத்துசாமிக் கோனாரவர்களின் காகிதக்
கையெழுத்துப் பிரதிகள் மூன்றும் ஆகிய ஆறு பிரதிகளின் உதவி கொண்டு
இந்நூல் பரிசோதிக்கப்பெற்றது. இந்நூற்பாக்களிற் சில வேற்றுத்தளை
விரவியும் சொல்லிலக்கணம் சிதைந்தும் காணப்படுகின்றன. அவற்றை
உள்ளவாறே வெளியிடலாயிற்று.
|