பக்கம் எண் :

157

                      ஆறுகள்

3.



திருமணி கொன்றையும் காவேரி வானியும் செய்யநதி
தருமணி காஞ்சி பொருனைநள் ளாறொடு சண்முகமும்
குருமணி பாலை நதிவாழை கோரை குடவனதி
வருமணி செண்பகம் சிற்றாறு சூழ்கொங்குமண்டலமே.

     (கு - ரை) கார்மேகக் கவிஞர் சதகம் பாடல் - 6 - ஒப்பு.

          அன்னசாலைகள் அமைத்து அறஞ்செய்தது

4.



நாலாறு நாடது நாற்பத்தெண் ஆயிரம் நற்கொங்கு சேர்
பாலான கங்கைதன் வங்கிசத் தோர்பச்சைப் பார்ப்பதியூர்
சேலாங் கருணை வடிவுடை நாயகி சேரும்வஞ்சி
மாலாங் கமலம் அமுதூட்டுவார்கொங்கு மண்டலமே

     (கு - ரை) பச்சை - பச்சை நாயகியம்மன், பார்ப்பதியூர் -
பார்வதிபுரம் என்னும் பாப்பினிக் கிராமம். இது காங்கயத்தை
அடுத்துள்ளது. வஞ்சி - கருவூர். 'வஞ்சியே கருவூர் என்ப' என்பது
நிகண்டு. கமலம் - தண்ணீர்; அமுது - சோறு, 'மாநிலத்தீர் சோறிடும்
தண்ணீரும் வாரும்' (நல்வழி - 32); கருவூரும் பாப்பினியும் மடவளாகம்
பெற்றுள்ள ஊர்களாம்.

     நாலாறு நாடு - கொங்கு மண்டலம் 24 நாடுகளாகப்
பிரிக்கப்பட்டிருந்தது. கார்மேகக் கவிஞர் சதகம் பா - 3 - உரை
நோக்கியுணர்க.

                   பூமாரி பொழிந்தது

5.



சீரிய செங்கம லாலய மேவுந் திருவெழின்மிக்
காரிரு வோருடன் கூடிக் கலந்தங் கவர் பொருட்டாற்
போரியல் வேல்விழி யிந்த்ராணி நாயகன் பொன்னொடுபூ
மாரிபொழிந்ததும் ஈரோடை சூழ்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) கமலாலயம் - தாமரைப்பூ, திரு - இலக்குமி, இருவோர்
- சிறுநல்லாள், பெருநல்லாள் என்னும் தேவ கணிகையர் குலப்பெண்கள்.