பக்கம் எண் :

171

பட்டன் சர்க்கரைமுன் வண்டமல்லியைச் செயித்தது

(29)



புல்லியென் னோடுவெல்வா ரிலையன்று புகழ்விருது
சொல்லியெங் கெங்குத் திரிபோது சர்க்கரைத் தோன்றல்முன்னே
வெல்லவல் லானொரு பட்டன்துணிந்து வெகுண்டு வண்ட
மல்லியைத் தோய்த்துச் செயங்கொண்ட துங்கொங்கு மண்டலமே

     வட நாட்டிலிருந்து வந்த மல்யுத்தவீரன் வண்டமல்லியென்பவன்
தன்னோடு போர்செய்து வெல்பவர் யாருமில்லையென்று விருதுகூறிப் பல
நாடுகளுக்கும் சென்று மற்போரில் பல வீரர்களையும் வென்று வெற்றிக்கொடி
நாட்டிக் கொங்குநாட்டிற்கு வந்தான். கொங்குநாட்டிலுள்ள ஆனூர்ச்
சர்க்கரையின் முன்பு சென்று தான் பெற்ற விருதுகளைக் கூறினான். ஆனூர்ச்
சர்க்கரை அவன் சவாலை யேற்றுத் தன் கோட்டை வாயிற்படியிலுள்ள
சண்டிகா தேவியைப் பூசைசெய்து கொண்டிருந்த இம்மடிக்கைச் சிவந்தாரைய
ரென்னும் வீர சைவப் பட்டரையேவ அவர் வண்ட மல்லியைக் கோபித்து
நிலத்தில் குப்புறத் தள்ளித் தோய்த்து வெற்றி கொண்டார். வண்டமல்லி
வெட்கமுற்றுத் தலை குனிந்து வணங்கிப் போயினான். ஆனூர்ச் சர்க்கரை
சிவந்தாரையரைக் குருவாகக் கொண்டு 'சொட்டைமுனை' என்னும் ஆயுதப்
பயிற்சி பெற்றுப் பல போர்களிலும் வெற்றி பெற்றார்.

     பழையகோட்டை அரண்மனையில் சண்டிகாதேவி கோவிற்
பூசைசெய்து வருபவர் சிவந்தாரையர் மரபினரே. இவர்களுக்கு இம்மடிக்கைச்
சிவந்தார், யானைக் கைச்சிவந்தாரென்ற பல பெயர்களுண்டு.

"இம்மடிக்கைச் சிவந்தா ரிறைவி விஞ்சை மந்திரத்தின்
 மும்மடிப் பூசைவாங்கும் முதல்வியே"

               - சண்டிகாதேவி விசயதசமிப் பாடல்

'அன்றுபெறு சிவந்தா ரைய சிரோமணியை இன்பமுறு  சொட்டைக்கிசைந்தகுருவாய்ப்படைத்தோன்"

                                - பழம் பாடல்