பக்கம் எண் :

172

             மலடிகல் - திருச்செங்கோடு

(30)சொலடியு னக்குப்பின் பேரே தெனவசை சொல்பவரைக்
கலடிப டச்செய்து மாதவம் போற்றியிக் காசினியில்
நலடிகண் ணுக்குளொற் றிக்கொள்ளப் பிள்ளையை நச்சிச்சுற்றும்
மலடிகல் சூழ்திருச் செங்கோடை யுங்கொங்கு மண்டலமே.

              ஐவர் மலை - கல்லாரமலர்

(31)கலைமுத் தமிழ்கொண்ட வைகாவூர் நாட்டிற் கனகமுகில்
தலையிற் றுயில வளர்ந்தோங்கி யோங்கியித் தாரணியில்
நிலையிற் புகழ்கொண் டழியாத நன்னெறி நீதியைவர்
மலையிற் கல்லார மலர்பூப் பதுங்கொங்கு மண்டலமே

            மல்லரை வீமன் செயித்தது - தாராபுரம்

(32)நல்ல புகழ்வஞ்ச லாட புரத்திலன் னாளைவரும்
வெல்லு முபாயத் துருமாறிக் கொண்டந்த வேந்தன் பக்கல்
செல்லும்பொழுது துரியோ தனன்விட்ட தீயசெட்டி
மல்லரை வீமன் செயித்தது வுங்கொங்கு மண்டலமே

     பஞ்சபாண்டவர்கள் துரியோதனனுடைய ஏவலின்படி பன்னிரண்டு
ஆண்டுகள் வனவாசம் செய்தபின்னர் ஓராண்டுக் காலம் கரந்துறை வாசம்
செய்ய நேர்ந்தது. அக்கரந்துறை வாசம் விராடநகரம் என்பது லாடபுரம்
எனமருவி வழங்குகின்றது. அந்த லாடபுரம் என்பது கொங்கு நாட்டிலுள்ள
தாராபுரமாம் என்பர்.

     தாராபுரம் தில்லாபுரியம்மன் கோயிலின் முன்புள்ள பலகைக்
கற்சாசனம் வருமாறு:

     "சாலி (1125) க்குமேல் செல்லா நின்ற காளயுத்தி வருஷம் புதவாரம்
தசமி உத்தரம் மீனலக்கினம் இப்படிப்பட்ட சயதினத்தில் கொங்குவஞ்சி
லாடபுரம், ராஜராஜபுரம், விதாபுரம் நறையநாடு காணி கொண்டது.
பிரமணகவுண்டன்..... நல்லா.... ட்டிகவுண்டன் நல்லமுத்துக் கவுண்டன்,
சின்னண கவுண்டன் தெய்வம் வஞ்சியம்மன் தில்லாபுரி பிரமராயன் ....."
என்பது.