பக்கம் எண் :

200

       வெண்ணெய்நல்லூர்க் கண்ணன் வாழ்ந்தது

(101)



பெண்ணைநல் லாறுந் திருக்கோவ லூரும் பிரபலமும்
வெண்ணைநல் லூருஞ் சடையனல் வாழ்வை விளங்குசம்பாப்
பண்ணை குலாதிபன் றொண்ணூறுமாறும் பரவுபுகழ்
மண்ணையும் வெண்ணையு முண்டவன் வாழ் கொங்கு மண்டலமே.

     (கு - ரை) திருமுனைப்பாடி நாடு என்னும் நடுநாட்டில் நல்ல
பெண்ணையாற்றையும் திருக்கோவலூரையும் முதன்மையான அதிகாரத்
தன்மையையும் வெண்ணைநல்லூரையும் உடையவன் சடையன். அவன்
மக்களின் வாழ்வை விளங்கச் செய்யும் சம்ப என்னும் உயர்ந்த நெல்லை
விளையச் செய்கின்ற வயற்கூட்டங்களுக்குத் தலைவனாயுள்ளவன்.
வேளாளருக்குரிய தொண்ணூற்றாறு கீர்த்திகளுக்குமுரியவன். அவன்
மண்ணையும் வெண்ணையும் உண்ட கண்ணன். அவன் வாழ்தற்குரிய நாடு
கொங்குமண்டலம் என்பதாம்.

     இப்பாடலினால் சடையன் நடுநாட்டுரிமையும் உடையவன் என்பது
புலனாகின்றது. வெண்ணைநல்லூர் பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ளது.

     "வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணைநல்லூரருட்டுறையுள்"
என்பது சுந்தரர் தேவாரம். பெண்ணையாறு தமிழ் நாட்டிலுள்ள வளமிக்க
நதிகளுள் ஒன்று. "வண்கரை பொழுது வருபுனற்பெண்ணை" என்பது
திருக்கோவலூர்ச் சாஸனம். திருக்கோவலூர் நடுநாட்டின் பழமையான
தலைநகரம். இதனைச் "சேதி நன்னாட்டினீடு திருக்கோவலூர்" என்பர்
சேக்கிழார்.

     சடையன், திருமாலுக்குரிய கண்ணன் என்னும் இளமைப் பெயரையும்,
'சரராமன்' என்னும் விருதுப் பெயரையும் உடையவனாகலின் உபசாரமாக
"மண்ணையும் வெண்ணையுமுண்டவன்" எனக்கூறப்படுகின்றான்.

     சடையன் மரபு சிறந்த மரபு. சிவஞானபோதம் அருளிச் செய்த
திருவெண்காடர் என்னும் மெய்கண்ட தேவரைத் தந்தது