தெய்வீக நிகழ்ச்சிகள், வேளாண்குடி மக்கள், அவர்தம்
குலங்கள், குலத்துச் சான்றோர்கள், புலவர்கள், புரலர்கள் மற்றும் நாட்டின்
இயல்புகள் அனைத்தையும் விளக்கமாக அறிகின்றோம். கார்மேகக் கவிஞர்,
வாலசுந்தரக் கவிஞர், கம்பநாத சுவாமிகள் ஆகிய மூவர் பாடிய மூன்று
சதகங்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதன்கீழ் வருவன மூன்றாம்
சதகத்தைச் சேர்ந்தவையாம்.

முதற் சதகம் 17 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்ட தென
அறிகின்றோம். மற்ற சதகங்களில் 'நாலாறு நாடது நாற்பத்தெண்ணாயிரம்
நற்கொங்கு" என்னும் தொடக்கப் பாடல் பயின்று வருதலின் இவையிரண்டு
சதகங்களும் அதன்பின் தோன்றியனவாம். வாலசுந்தரக் கவிஞர்
வெண்ணெய்நல்லூர்ச் சடையனையும் அவர்தம் மரபுளோரையும் வாழ்த்திப்
பாடியமை கொண்டு இவர்தம் நூல் 12 ஆம் நூற்றாண்டி லெழுந்தது எனத்
துணிந்து கூறும் கொள்கை ஆய்வுக் குரியதேயாம்.

முதுபெரும்புலவர் தெய்வசிகாமணிக் கவுண்டரவர்கள்
தொகுப்பிலிருந்த இந்த மூன்றாவது சதகம் செல்லரிக்கப் பெற்று
இராம பாணத்தால் மிகவும் நொந்து போய் உருப்பெறலரிதான
நிலையிலிருக்கின்றது, முயன்று இந்த நூலைப் பெயர்த்து எழுதிய பின்பு,
புலவரவர்கள் தம் உதவியாளர்களைக் கொண்டு எழுதிவைத்திருந்த
கைப்பிரதிகளும் கிடைத்தன. மூன்று சதகங்களிலுமுள்ள பாடல்கள்
அனைத்தும் அடங்கிய மூலப் பிரதிகள் மற்றும் பழைமையான கைப்பிரதிகள்
சிலவும் இருந்தன. எந்தப்பாடல் எந்தச் சதகத்துக் குரியது என அறியாத
வகையில் தொகுப்பாக எழுதி வைக்கப்பட்டிருந்தன. பாடல்களில் வரும்
பிரதிபேதங்களைப் புலவர் அவர்களே குறித்து வைத்திருக்கின்றார்கள்.
இந்நூலின் பின்னால் அவைகள் தரப்பெற்றுள்ளன. பூந்துறைப்பிரதி,
தாராபுரம் பிரதி, பழைய கோட்டைப் பிரதி என்று பிரதிகள் கிடைத்த
ஊர்ப் பெயர்களையும் அவர்கள் குறித்துள்ளார்கள். முதுபெரும் புலவர்
பெருந்தகை தம் பொன்னான காலம் முழுவதையும் கொங்கு நாட்டின்
வரலாற்றுக்கெனவே கழித்து அரும்பாடுபட்டிருக்கின்றார்கள்
என்பதைக்காண நமக்கு வியப்பாக இருக்கின்றது.

இந்த மூன்றாவது சதகத்தின் முதல் ஓலையின்மேல் "கம்பநாத
சுவாமி பாடிய கொங்குமண்டல சதகம்" என எழுதப்பட்டுள்ளதேயல்லாமல்
நூல் தொடக்கம், காப்பு, அவையடக்கம் முதலியன இரண்டாம் சதகத்தை
ஒட்டியே வருகின்றன. இடையிடையே முதல் சதகப் பாடல்களும் புதிய
பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இதனுள் முதல் சதகத்தின் பாடல்கள் 26;
இரண்டாம் சதகத்