பக்கம் எண் :

31

     வரலாறு :- பாணர் (வாணர்) என்பவர்கள் பழந்தமிழ்க் குடிகளுள்ளே
மிகச் சிறந்த ஜாதியார். தங்கள் பாடல்களால் நாட்டில் பெருந்தன்மையையும்
வீரச் செயல்களையும் வளர்த்து வருவார்கள். தம்முன்னோர்கள் பாடியுள்ள
பாட்டுகளைத் தலைமுறை தலைமுறையாகப் பாடுவார்கள். புதிய பாட்டுக்
களையுந் தொடுப்பார்கள். வாணி தேவியே நாவினின்று செய்யுளாக
உதிக்கிறாள். ஆனதால் இவர்கள் தரும சீலர்கள் என்று போற்றப்படுவார்கள்.
ஒருவனை "நீ கெடுவாயாக! என்று அங்கதம் (அறம்) பாடுவார்களாயின்
நிச்சயமாகக் கெட்டு விடுவானென்று நம்பிக்கை கொண்டுளதால்
இவர்களிடத்து மாந்தர்களுக்குப் பயமுண்டு. வேந்தர்களும், வீரர்களும்,
இவர்களாற் பாடப்படுவதையே மேலான கௌரவமென்று போற்றி
வந்தார்கள். அச்சமின்றி ஊர் ஊராகச் சென்று, இன்பச் சுவை முதிர்ந்த
அகப் பாட்டுகளையும், வீரச் செயல் முதலியன சிறந்த புறப்பாட்டுக்களையும்,
யாழ் இசைத்தும், இன்றியும் கேட்போர் அவசமாகும் படி பாடவல்லவராதலின்
அச்செய்யுளிற் பொதிந்த தம் செய்கை விரைவில் பரவிவிடுமென்பது துணிவு.
வேற்றரசர்களிடத்துத் தூது போதற்கும் உரியவராவர். தம் அரசனது
வீரத்தையுஞ் சேனை வன்மையையும், மாற்றரசனது மெலிவையுங் கூசாமல்
நேர் நின்று கூறிச் சமாதானஞ் செய்வர். போர்க்களத்திலிருக்கும் பொழுதும்,
கூட இருந்து ஆடல் பாடல்களால் மகிழ்விப்பர். அரசன் மனது
மயக்கமுற்றால் அவர்களது, முன்னேர்களின் வெற்றியையும், வீரத்தையும்
எடுத்துக் கூறி ஊக்கமூட்டுவர். பகைவர்களிடங்கொண்ட பொருள்களை,
அரசர்கள் மகிழ்ந்து கொடுக்கப் பெறுவர். அரசர், நீதி குன்றுவராயின்
இடித்துரைப்பர். ஒருகால் தம் அரசர் தோல்வி பெறுவராயின், மாற்றரசனிடஞ்
சென்று அவனைப் புகழ்ந்து பாடி விடுவித்தாலும் புரிவர். மாண்டு
போனாரேனும் அவர் மக்கள், முதலியோர்களுக்குப் பேருதவி புரிவிப்பவர் -
கோயில் முதலிய இடங்களிலே காணப்படும் கல்வெட்டுக்களைவிட,
நிலையான சாசனமாகும் என்று இவர்கள் பாடும் பாடல்களைத் துணிவுடன்
எடுத்துரைக்கலாம். ஒருவன் புகழ் உலகத்திற் பரவ வேண்டுமென்றாலும்
நிலைத்திருக்க வேண்டுமென்றாலும் இவர்களாற் பாடப் பெறுவதைவிட
மேலானதில்லை. சங்க நூல்களில் இவர்களது அரும் பெருஞ்செயல்கள்
நன்கு விளங்குகின்றன.

     சிறுபாணாற்றுப்படை யுரையிலே பாணர் பாடுவோர் இவர்கள்
இசைப்பாணரும் யாழ்ப்பாணரும், மண்டைப்பாணரும் எனப்
பலவகையினரெனவும், பொருநராற்றுப்படை யுரையிலே, ஏர்க்களம்
பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோரெனப்