பக்கம் எண் :

43

                      முத்தரசர்

39.சொற்றவ ராதோர் கனிவு ளகத்தோர் துகளறநூற்
கற்றவர் தங்கட் குதவுத னோம்பெனக் கண்டவராஞ்
செற்ற மிகுமுத் தரசர்கள் வாழ்வு செழித்தரசு
மற்ற புகழும்பெற் றாண்டது வுங்கொங்க மண்டலமே.

     (க-ரை) சொல் மாறாது இளகிய உள்ளத்தவராய்ப் புலவர்களை
ஆதரிப்பவர்களும் வீரத்தன்மையுள்ளவர்களுமான முத்தரசர்கள் ஆண்டது
கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : முத்தரையர் என்பவர்கள் பாண்டிய நாட்டை ஆண்ட
அரசர்கள். ஆனால் நார்த்தாமலைச் சாசனத்தால், விடேல் விடுகு
முத்தரையன் மகன், சாத்தம் பழியிலியாவன். அவன் மகள் பழியிலி சிறிய
நங்கை என்பவள்; மீனவன் தமிழதியரை யனாயின மல்லனனந்தனை
மணந்தாளென்றிருப்பதால், மீனவராகிய தென்னவரும், முத்தரையரும் ஏக
காலத்தில் பாண்டி நாட்டையும் மற்றும் பெற்றுக்கொண்ட நாடுகளையும்
ஆண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை சமஸ்தானத்துள்ள குடுமியான் மலைக்
கோயில் சாசனத்தில், சத்துரு பயங்கர முத்தரையன், தஞ்சாவூருக்கு
வடமேற்கிலும், திருக்காட்டுப் பள்ளிக்கு இரண்டு மயில் தூரத்து முள்ள
சந்திரலேகை சதுர்வேதி மங்கல மென்ற பழம் பெயருள்ள செந்தலைக்
கிராமத்துள் மீனாட்சி சுந்தரேசுரர் கோயிலுள் குவான் மாறன் பெரும்பிடுகு
முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி வரையன்
மகனுமாகிய சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையன் என்பவர்களின்
சாசனங்களிருக்கின்றன. இக்காலம் சுமார் ஆயிர வருஷங்களாம்.
திருச்சிராப்பள்ளிக்குச் சமீபத்தில் "முத்தரைய நல்லூர்" என ஓரூரிருக்கிறது.

     இம்முத்தரையர் மிகுந்த புகழுடையவர்கள் என்பதை நாலடியாரிலுங்
காணலாம்.
                   (மேற்)

பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருணைச் சோறார்வர் கயவர் கருணையைப்
பேரூ மறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரு மரிதாய் விடும்.