பக்கம் எண் :

மூலமும் உரையும்157

போன்ற தமயந்தியானவள், நித்திலத்தின் பொன்தோடு - (தன் காதுகளில் அணிந்துள்ள) முத்துப்பதித்து ஆக்கிய பொன் குண்டலமானது, நீலமணி தோடு ஆக - நீலக்கல் இழைத்த குண்டலமென்னும்படியாக, மை தடம் கண் செல்ல - (அவளுடைய) மைதீட்டிய நெடிய கண்களின் பார்வை சுழன்று சுழன்று போக, வயவேந்தர் சித்தம் வண்டின் மருங்கேவர-வெற்றிமிக்க அரசர்களுடைய மனமானவை வண்டுகளைப்போல் அவள் பக்கத்தே வர, பந்தர்கீழ் வந்தாள் - (சுயம்வர மண்டபத்தில் போடப்பட்டிருக்கும்) பந்தலிடத்தே வந்தாள்.

(க - து.) தமயந்தியானவள், தன் கண்களின் நீலவொளியால் காதிலணிந்த முத்துக் குண்டலத்தின் வெள்ளிய நிறம் கருநிறமாகும்படி கட்பார்வையைச் செலுத்திக் கொண்டு சுயம்வர மண்டபத்தை அடைந்தாள் என்பதாம்.

(வி - ரை.) தமயந்தி கருவிழியின் நிறம், அவள் அணிந்துள்ள முத்தாலாக்கிய தோட்டின்மீது பாயும்போது அதன் வெண்ணிறம் மாறிக் கருநிறம் காட்டிநின்றது. எனவே, அவள் தன் கட்கடையின் சிறப்பை விளக்கியவாறாம். அவள் தன் கட்பார்வையை நச்சிவந்த வேந்தர்களின் மனம், அவள்பால் ஈர்க்க நீலமலரை விரும்பிய வண்டினம் போல் சுற்றிச்சுற்றி திரிதலால், ‘வண்டின் மருங்கே வர’ என்றார். வண்டின் என்பதில் ஐந்தனுருபாகிய ‘இன்’ ஈண்டு ஒப்புப் பொருளில் வந்தது.

1‘நல்லணி மெய்யிற் பூண்டு நாசிகா பரண மீதில், சொல்லதில் குன்றி தேடிச் சூடிய தென்னோ என்றான், மெல்லியல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண்முத் தென்றாள்’ என, விவேக சிந்தாமணியினும் இக்கருத்துக் காண்க. அணங்கு - தெய்வப்பெண்.

2‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ’

என்பதில் அணங்கு இப்பொருள் தருதலை அறிக. (129)

தமயந்தி வந்தவுடன் மன்னர்கள் அவளைப் பார்த்தாரெனல்

137. பேதை மடமயிலைச் சூழும் பிணைமான்போல்
கோதை மடமானைக் கொண்டணைந்த - மாதர்
மருங்கின் வெளிவழியே மன்னவர்கண் புக்கு
நெருங்கினவே மேல்மேல் நிறைந்து.

1. விவேக சிந் : கழகப் பதிப்பு : 128.
2. திருக்குறள் : 1081.