|
(இ - ள்.) பேதை மடமயிலை -
வஞ்சமற்ற இளமை பொருந்திய மயிலினை, சூழும்
பிணைமான்போல் - சுற்றியிருக்கின்ற
பெண்மான்களைப்போல, கோதை மடமானை கொண்டு
அணைந்த - மாலையணிந்த அழகிய மான்பிணை போன்ற
தமயந்தியை அழைத்துக்கொண்டு வந்த, மாதர்
மருங்கின் வெளிவழியே - தோழிப் பெண்களின்
இடுப்பினது வெளியின் வழியாக, மன்னவர் கண் புக்கு -
அரசர்களின் கண்பார்வை நுழைந்து, மேல்மேல்
நிறைந்து நெருங்கின - ஒருவர் பார்வைக்குமுன்
மற்றொருவரின் பார்வையாக எங்கும் நிரம்பிக்
கூடிநின்றன.
(க - து.) தமயந்தியைச் சுயம்வர
மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டு வந்த
தோழிப்பெண்களின் இடுப்பினது வெளி வழியாக
மன்னர்கள் எல்லாம் தமயந்தியைப் பார்த்த
வண்ணமாகவே இருந்தார்கள் என்பதாம்.
(வி - ரை.) பேதை - கள்ளங் கவடற்ற
தன்மை. தமயந்தியைச் சுயம்வர மண்டபத்துக்கு
அழைத்துக் கொண்டுவந்த தோழிகளின் காட்சி,
இளமைமிக்க மயிலைச் சூழ்ந்துநின்ற
பெண்மான்கள்போல் இருந்தது என்று தமயந்தியின்
வனப்பும், தோழிப் பெண்களின் சிறப்புந்
தோன்றக் கூறினார். தமயந்தியை எக்கால்
காண்போம் காண்போம் என்று ஏக்கற்றிருந்த
அரசர் குழாங்கள், அவள் வந்தவுடன் நீரிற்கு
அவாவுற்று வாடி நிற்கும் நெற்பயிர்கட்கு நீரை
மேகங்கள் பொழிந்தபோது எவ்வாறு அப்பயிர்
இன்புற்று ஏற்குமோ அவ்வாறே வந்தவுடன்
அவாக்கொண்டு அவள் அழகைப்
பார்த்தனரென்பாராய் ‘மன்னவர் கண்புக்கு
நெருங்கின’ என்றார். எனவே அரசர் கூட்டமும்
அவர்தம் அளவற்ற காதலும் காட்டியவாறாம்.
தமயந்தியை மணக்க விரும்பி வந்த அரசர் கூட்டம்,
தமயந்தியின் அழகு முழுதையும் காண அவாவி
ஏக்கற்றிருந்தது. ஆதலால், பக்கத்தில்
தமயந்தியைச் சூழ்ந்து நிற்கும் சேடியர்
கூட்டத்தினால் பார்க்க இயலவில்லை. வெளியாக
இருப்பது அவர்தம் இடையின் ஊடு வெளியே. ஆதலால்,
அதன் வழியே கண்ணைச் செலுத்திப் பார்த்தனர்
என்க. முன்னரும் அன்னத்தைப் பிடிக்கப் போந்த
மங்கையரை, ‘நாடி மடவன்னத்தை நல்ல மயிற்குழாம்,
ஓடி வளைக்கின்ற தொப்ப’ என்னும்
நயத்தைப்போல் நயந்தோன்றப் ‘பேதை
மடமயிலைச் சூழும் பிணைமான் போல்’ என்றார்.
மருங்கு-இடை. கண்புக்கு நெருங்கின என்பது, முதல்வினை,
சினைவினையாகக் கூறப்பட்டதாகும். ‘காலொடிந்து
விழுந்தது’ என்பதுபோற் கொள்க. 1‘சினைவினை
சினையொடு முதலொடும் செறியும்’ என்னும் நன்னூல்
விதியையும் உணர்க. (130)
1. நன்னூல் : 345.
|