பக்கம் எண் :

மூலமும் உரையும்159

தமயந்தி, அன்னம்போல் சுயம்வர மண்டபம்
அடைந்தாள் எனல்

138. மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள்-மின்னிறத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்
பொய்கைவாய்ப் போவதே போன்று.

(இ - ள்.) மின்நிறத்து - மின்னல் நிறம் போன்று ஒளிவிடும், செய்யதாள் வெள்ளை சிறை அன்னம் - சிவந்த கால்களையும் வெள்ளிய சிறகுகளையுமுடைய அன்னப் பறவை, செம் கமல பொய்கைவாய் போவதே போன்று - செந்தாமரை மலர்கள் மலர்ந்துள்ள தடாகத்தினிடத்தே செல்வதுபோல், பொன்னின் மடபாவை - திருமகள் போன்ற அழகுபடைத்த தமயந்தியானவள், மன்னர் விழி தாமரைபூத்த மண்டபத்தே போய்ப்புக்காள் - அரசர்கள் கண்களென்னும் தாமரை மலர்கள் பூத்து விளங்குகின்ற (சுயம்வர) மண்டபத்தினிடத்தே சென்ற புகுந்தாள்.

(க - து.) தமயந்தியானவள் செந்தாமரை மலர்கள் மலர்ந்துள்ள தடாகத்திற்குச் செல்லும் அன்னம்போல் சுயம்வர மண்டபத்துக்குள் போய்ச்சேர்ந்தாள் என்பதாம்.

(வி - ரை.) அன்னம் தமயந்திக்கும், மன்னர்கள் விழி, தாமரை மலருக்கும், சுயம்வர மண்டபம் பொய்கைக்கும் ஏகதேச உருவக மாக வந்தன. பொன் - திருமகள். பாவை - பழுதின்றியன்ற அழகிய ஓவியம். இங்கே உவம ஆகுபெயராய்த் தமயந்திக்கு வந்தது. புக்காள் : வினையாலணையும் பெயர். ‘1நாணின்பாவாய் நீணில விளக்கே’ என்பதில் பாவாய் என வருவதும் காண்க. ‘மின்னிறத்துச் செய்யதாள் வெள்ளைச் சிறை’ என்னுந் தொடரில், சொல்முரணோடு பொருள்முரண் அழகுகள் பொலிவுற்றிருத்தல் காண்க. (131)

மன்மதன், ‘தமயந்தியின் பார்வை யார்மேற் செல்லுமோ ?’
என்று எதிர்ப்பார்த்திருந்தான் எனல்

139. வடங்கொள் வனமுலையாள் வார்குழைமேல் ஓடும்
நெடுங்கண் கடைபார்த்து நின்றான் - இடங்கண்டு
பூவாளி வேந்தன்தன் பொன்னாவம் பின்னேயிட்
டேவாளி நாணின்மேல் இட்டு.

1. சிலப்பதி, 16 : 90.