பக்கம் எண் :

மூலமும் உரையும்161

தோழி ஒருத்தி, தமயந்திக்கு அரசர்களைக் குறிப்பிட்டுக்
காட்டுதல்

140. மன்னர் குலமும் பெயரும் வளநாடும்
இன்ன பரிசென் றியலணங்கு - முன்னின்று
தார்வேந்தன் பெற்ற தனிக்கொடிக்குக் காட்டினாள்
தேர்வேந்தர் தம்மைத் தெரிந்து.

(இ - ள்.) இயல் அணங்கு - இயற்கையழகு நிறைந்த பெண்ணொருத்தி, தார்வேந்தன் பெற்ற தனிக் கொடிக்கு முன்நின்று - வெற்றிமாலை சூடிய வீமமன்னன் ஈன்றெடுத்த ஒப்பற்ற பூங்கொடி போல்வாளாகிய தமயந்தியின் முன்பாக நின்றுகொண்டு, தேர்வேந்தர் தம்மை தெரிந்து - (சுயம்வரத்துக்காக அங்குக் கூடியிருக்கின்ற) தேரினையுடைய அரசர்களையெல்லாம் இன்னவர் இத்தன்மையர் எனத் தெரிந்துகொண்டு, மன்னர் பெயரும் குலமும் வளநாடும் - அவ்வவ் வரசர்களின் பெயர்களும் மரபுகளும் வளப்பம் மிக்க நாடுகளும், இன்ன பரிசு என்று காட்டினாள் - இத்தன்மையுடையன என்று தமயந்தி உணருமாறு சுட்டிக் காட்டிக் கூறுவாளாயினாள்.

(க - து.) இயற்கையழகுள்ள பெண்ணொருத்தி தமயந்திக்கு அரசர்களின் பெயர், குலம், நாடு முதலியவற்றைச் சுட்டிக் காட்டிக் கூறினாள் என்பதாம்.

(வி - ரை.) இயல் அணங்கு என்பதற்குக் கலைமகள் என்று பொருள் கூறுவாருமுளர். இயல் : இயற்கை. அணி ஆடை முதலியவற்றால் செயற்கைப் புனைவு புனைந்தவளல்லள், இயல்பாகவே பேரழகுள்ளவள் என்பதை உணர்த்தி நிற்பதற்கு ‘இயல் அணங்கு’ என்றார். ‘தனிக்கொடி’-ஒப்பற்ற குலக்கொடி போல்வாள் என்றலுமாம். கண்ணகியாரை, ‘1மாநாய்கன் குலக்கொம்பர்’ என்றார் இளங்கோவடிகளும். சேடி ஒருத்தி சுயம்வர மண்டத்தில் வந்து குழுமியிருக்கும் அரசர்களையெல்லாம் நன்கு தெரிந்துகொண்டு, தமயந்திக்கு இன்னார் இத்தன்மையர் என்று கூறி, அவளும் அறிந்துகொண்டால் அவர்களுள் உருவும் திருவும் குலனும் குணனும் தனக்கு ஒத்த தன்மையுடைய ஓர் வேந்தனை மணமாலை சூட்ட ஒருப்படுவாள் என எண்ணி வீமவேந்தன் ஆணையால் பெண்ணொருத்தியை விடுத்துத் தமயந்திக்கு விளக்கிக் கூறுமாறு ஏற்படுத்தி, அவள் ஒவ்வொருவர் நிலைகளையும் கூறினாள் என்க. காட்டுதல் - சுட்டிக் காட்டிக் கூறுதல். இனிமேற் முற்படுவதை காட்டினாள் என்றது, இயல்பாக வந்த கால வழுவமைதி. (133)

1. சிலப்பதி, 1 : 23.
ந. - 11