பக்கம் எண் :

162நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

சேடி, தமயந்திக்குச் சோழநாட்டு அரசனைக் காட்டுதல்

141. பொன்னி அமுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின்
சென்னி தடவும் திருநாடன் - பொன்னிற்
சுணங்கவிழ்ந்த பூண்முலையாய் சூழமரில் துன்னார்
கணங்கவிழ்ந்த வேலனிவன் காண்.

(இ - ள்.) பொன்னின் சுணங்கு அவிழ்ந்த பூண்முலையாய் - பொன்னிறம் போன்ற தேமல் படர்ந்த அணிகளணிந்துள்ள கொங்கையாய், சூழ் அமரில் - நெருங்கிச் செய்கின்ற போரில், துன்னார் கணம் கவிழ்ந்த வேலன் இவன் - பகைவர் கூட்டங்கள் (தலை) வணங்குதற்குக் காரணமாகக் கொண்ட வேலேந்தியவனாகிய இவ்வேந்தன், பொன்னி அமுதப் புதுக்கொழுந்து-காவிரியாற்றின் புதுப்பெருக்கு நீரோட்டமானது, பூங்கமுகின் சென்னி தடவும் திருநாடன் - பூங்கொத்தையுடைய கமுகினுடைய மேலிடம் வரை சென்றோடும் அழகிய சோழ நாட்டுக்குரிய வேந்தனாகிய சோழ மன்னன், காண் - (நீ) அறிந்துகொள்வாயாக.

(க - து.) சுணங்கவிழ்ந்த கொங்கையுடைய தமயந்தியே ! இந்நின்ற வேந்தன் காவிரியாறு பெருக்கெடுத்துக் கமுகின் தலைவரை உயர்ந்தோடும் நீர்வள மிக்க சோழ நாட்டுக்குரிய சோழ மன்னன் காண் என்றாள் என்பதாம்.

(வி - ரை.) காவிரிநதி, நீர்ப் பெருக்கெடுத்தோடி அடுத்த வயல் குளம் ஏரி முதலியவற்றை நிரப்பி வேலியாயிரம் விளையுட்டாக்கி நாடெல்லாம் பாதுகாக்கும் பண்புடையதாக மிளிர்தலின், அதன் நீரின் செழுமைவளம் - வற்றாது பெருகி நிற்கும் நிலை-இனிமை குளிர்மை செம்மை வண்மை முதலியன தோன்ற - அந்நாட்டுக்குரியவன் என்பதை அறிய ‘பொன்னி அமுத...நீர்நாடன்’ என்றார். கரிகாற் சோழன் பெருமையும் அவன்றன் வெற்றிப் பெருமையும் விளக்கி நூலாக அணி செய்த புலவர் பெருமகனார் கடியலூர் உருத்திரங்கண்ணனார், அவன்வேல், பவைகர்க்குக் கொடுந்துன்பம் விளைக்கும் கொடுமை மிக்கதெனவும், அவன் செங்கோல் முறைமை, நாட்டு மக்கட்கு நலஞ்செய்து தண்ணளி சுரக்கும் ஈரமுடையதெனவும், அமைத்து, தலைவன் சென்ற பாலைநிலப் பெருவழி வெம்மைத்துன்பத்தையும் தலைவியின் காதற்கனிவின் தண்மை இன்பத்தையும் உவமமாக ஆக்கி,

‘1வேலினும் வெய்ய கானம் அவன்
கோலினும் தண்ணிய தடமென் தோளே.’

1. பட்டினப்பாலை : 300-1.