பக்கம் எண் :

மூலமும் உரையும்163

என்று பட்டினப் பாலையிற் கூறிய தொப்ப இவர், சோழ வேந்தனைச் சேடி சுட்டிக் காட்டியதாக அமைத்த இத்தொடரில், ‘துன்னார், கணங்கவிழ்ந்த வேலன்’ என்றார்.

‘1காலனம் காலம் பார்க்கும் பாராது
வேலீண்டு தானை விழுமியோர்’

என்று பிறரும் வேலையே சிறப்பித்துக் கூறுதலும் அறிக. (134)

சேடி, தமயந்திக்குப் பாண்டிநாட்டு மன்னனைக் காட்டுதல்

142. போர்வாய் வடிவேலால் போழப் படாதோரும்
சூர்வாய் மதரரிக்கண் தோகாய்கேள்-பார்வாய்ப்
பருத்ததோர் மால்வரையைப் பண்டொருகால் செண்டால்

திரித்தகோ இங்கிருந்த சேய்.

(இ - ள்.) போர்வாய் வடிவேலால் - போர்க்களத்தில் கூர்மை பொருந்திய வேற்படையினால், போழப் படாதோரும் - பிளக்கவொண்ணாத வீரர்களும், சூர்வாய் மதர் அரிக்கண் தோகாய் - அச்சங்கொள்ளுமாறு செய்கின்ற மதர்த்த செவ்வரியோடிய கண்களையுடைய மயில்போன்றாய்! கேள் - நான் கூறுவதைக் கேட்பாயாக, பார்வாய்-இம் மண்ணுலகில், பருத்தது ஓர் மால் வரையை - பருத்து ஒப்புயர்வற்றதாய் இருக்கின்ற நீண்ட பொன்மலையை, பண்டு ஒருகால் - முன் ஒரு காலத்தில், செண்டால் திரித்த கோ - செண்டாலடித்து நிலைபெயரச் செய்த (பாண்டி) மன்னனாவான், இங்கு இருந்த சேய் - இதோ இங்கு வீற்றிருக்கும் இவ்விளங்குமரன்.

(க - து.) வீரர்களையும் அஞ்சச் செய்கின்ற இரேகை படர்ந்த கண்களையுடையாய் ! இங்கு வீற்றிருப்போன், பொன்மலையைச் செண்டால் அடித்து நிலைகலங்கச் செய்த பாண்டி மன்னனாவான் என்பதாம்.

(வி - ரை.) வீரர்கள், யாருக்கும் அஞ்சாத நெஞ்சத் திண்மை படைத்தவர். அவர்களும் தமயந்தியின் கட்பார்வைக்கு அஞ்சுவர் என்றது, காதலாற் கலக்கமுறும் நிலையை. எனவே, தமயந்தியின் கண்பார்வை ஏற்றத்தைக் கூறியவாறாம். சூர் - அச்சம். உலகத்திலேயே சிறந்த பெரிய மலை, இமயம். அதனையும் செண்டால் அடித்து நிலைகுலையச் செய்த பெருமை பாண்டி மன்

1. புறம் : 41.