பக்கம் எண் :

164நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

னனுக்குரியது. ஒருவன் செய்த செயற்கருஞ் செயலை, அவன் வழிவந்தார் பிறர்க்கும் ஏற்றிக் கூறுதல் உலகியன் முறை. அம்முறைபற்றிப் பாண்டியர் வழித்தோன்றிய பாண்டிய மன்னனை ‘மால்வரையை......செண்டால் திரித்தகோ’ என்றார். செண்டால் என்பதில் மூன்றாம் வேற்றுமை ஆல் உருபு கருவிப் பொருளில் வந்தது. சேய் : முருகவேளை யொத்தவன் என்றலுமாம். செண்டு - செண்டு போன்ற ஒருவகைப் போர்க்கருவி. (135)

சேடி, தமயந்திக்குச் சேரநாட்டு மன்னனைக் காட்டல்

143. வென்றி நிலமடந்தை மென்முலைமேல் வெண்துகில்போல்
குன்றருவி பாயும் குடநாடன் - நின்றபுகழ்
மாதே இவன் கண்டாய் மானத் தனிக்கொடியின்
மீதே சிலைஉயர்த்த வேந்து.

(இ - ள்.) நின்றபுகழ் மாதே - நிலைபெற்ற புகழையுடைய பெண்ணே ! இவன் - இவ்வேந்தன், வென்றி நிலமடந்தை மென் முலைமேல் - வெற்றி பொருந்திய நிலமகளின் மெல்லிய கொங்கைகளின் மேலுள்ள, வெண்துகில் போல் - வெண்மையாகிய ஆடையைப் போல, குன்று அருவி பாயும் குடநாடன் - மலையினின்றும் அருவிநீர் பாய்ந்தோடுகின்ற மேற்கு நாட்டரசனாகிய, மானத்தனி கொடியின்மீது - பெருமைபொருந்திய ஒப்பற்ற தன் கொடியாடையின்மேல், சிலை உயர்ந்த வேந்து - விற்குறி (எழுதி) யேற்றிய சேர மன்னனாவான், கண்டாய் - அறிந்துகொள்க.

(க - து.) நிலையான புகழுடைய மாதே ! இந்நின்றவன், தன் கொடியில் விற்குறி எழுதி உயர்த்திய மேற்கு நாட்டுக்குக்குரியனான சேர மன்னனாவான் என்பதாம்.

(வி - ரை.) வென்றி - வெற்றி : மெலித்தல் விகாரம். நிலமகளுக்கு வென்றியாவது, எல்லாவுயிர்களையும் தன்னகத்தே தாங்கிப் பகையும் நொதுமலுமின்றி நடுநின்று பல்வகை வளங்களும் தந்து நல்லோர்க்கு இடனாக இருந்து பாதுகாத்தல். இதன் பெருமையை விளக்கவே ஒளவையாரும்,

1‘நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லி வாழிய நிலனே’

என, நிலத்தை வாழ்த்தியதூஉம் காண்க.

1. புறம் : 187.