பக்கம் எண் :

மூலமும் உரையும்165

சேரநாட்டுக்கு மலைநாடென்றே ஓர் பெயரும் உண்டு. ஆகலான், மலையினின்றும் அருவி பாய்ந்தோடி வளம் பெருக்கும் பெருமையுடையது. அருவிநீர் பெருகி வழிந்தோடுவது நிலமகள் கொங்கைமேற் போர்த்துள்ள வெண்ணிற ஆடைபோன்று தோற்றமளிக்கின்றது. அதனைக் கண்ணுறுவார்க்கு அஃது மாறா இன்பூட்டி மகிழ்வித்தலின், அதனைக் கற்பார் மனக்கண் கண்டு களிதுளும்புமாறு ‘வெண்துகில்போல் குன்றருவி பாயும் குடநாடன்’ என்றார். இவ்வாறே இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரும்,

1‘மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போலச்
செல்புனல்.’

என்றதும் இக் கருத்தோடொத்த தாதலை ஓர்க.

அருவியின் வெண்ணிறத்தையும் அது பல்வகைநிறச் செடிகொடி முதலியவற்றையும் அரித்துக்கொண்டு ஓடுகின்ற காட்சியைக் கண்ட நக்கீரரும், 2‘வேறுபல் துகிலின் நுடங்கி’ என்றார்.

சிலை-வில் : அதன் உருவுக்கு ஆகுபெயராக வந்தது. உயர்த்தல் - மேலேயெடுத்து நிறுத்துதல். சேரமன்னன் கொடியின் சிறப்பைக் கூறியவாறாம். இதனை, 3‘வானவரும், வில்லெழுதி வாழ்வார் விசும்பு’ என்றார், முத்தொள்ளாயிரத்தும். (136)

சேடி, தமயந்திக்கு யதுகுல மன்னனைக் காட்டல்

144. ஆழிவடி யம்பலம்ப நின்றானும் அன்றொருகால்
ஏழிசைநூற் சங்கத் திந்தானும் - நீள்விசும்பின்
நற்றேவர் தூது நடந்தானும் பாரதப்போர்
செற்றானும் கண்டாயிச் சேய்.

(இ - ள்.) ஆழி வடி அம்பு அலம்ப நின்றானும் - கடலிற் கூரிய அம்பினைக்கழுவும்படி நின்றவனும், அன்று ஒருகால் - முன்னொருகாலத்தில், ஏழ்இசை நூல் சங்கத்து இருந்தானும் - ஏழுவகை இசைகளையுடைய பேரவையில் தலைவனாக வீற்றிருந்தவனும், நீள்விசும்பின் நல்தேவர் தூது நடந்தானும் - நீண்ட வானவர் அவதாரமான பாண்டவர்கட்குத் தூதாக நடந்து

1. சிறுபாண் : 1 - 3. 2. திருமுருகு : 296.
3. முத்தொள் : 112.